உடுமலை, அக்.20-
உடுமலையில் வெள்ளியன்று நடைபெற இருந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வராமல் அலட்சியம் காட்டியதால், ஆவேசமடைந்த விவசாயிகள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் வெள்ளியன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கூட்டத்தில் கலந்து கொள்ள திரளான விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், இந்த கூட்டத்திற்கு தலைமையாக இருக்க வேண்டிய கோட்டாட்சியர் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் யாரும் மதியம் 12 மணிக்கும் மேலாகியும் கூட்ட அரங்கத்திற்கு வரவில்லை.

இதுதொடர்பாக அங்கிருந்த ஒரு சில அரசு அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் அனைவரும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறி கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம் கடந்த இரண்டு மாதமாக நடைபெறவில்லை. இந்நிலையில் வெள்ளியன்று கூட்டம் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான விவசாயிகள் காலை 10 மணியில் இருந்தே வந்துவிட்டோம். மேலும், இக்கூட்டத்தில் பல மாதங்கள் வறட்சியில் இருந்து தற்போது பெய்த மழையால் ஏதாவது விவசாயம் செய்ய வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினார் விவசாயிகளுக்கு தரமான உரம்,  விதை வழங்க என்ன நடவடிக்கை எடுத்தனர். பி.ஏ.பி. பாசன வாய்க்கால் அனைத்தும் குப்பை மேடாக மாறியுள்ளதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுக்க தவறியது.

மேலும், கடத்தூர் பகுதியில் பள்ளி கட்டிடத்தில் மேல் கூரை இடித்து விழுத்தது மற்றும் தற்போது அணைகளில் போதிய தண்ணீர் உள்ள நிலையிலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது ஏன் என்று பல்வேறு பிரச்சனைகள் குறித்து முறையிட இருந்தோம். ஆனால், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வராமல் விவசாயிகளை அலட்சியம் செய்து விட்டனர். இதனால் இன்றும் கூட்டம் நடைபெறவில்லை. இவ்வாறு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை திட்டமிட்டு பல மாதங்கள் நடத்தாமல் இருப்பது விவசாயிகளை மேலும் வஞ்சிக்கும் செயலாகும் என ஆவேசமாக தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த வெள்ளியன்று முடிவு செய்யப்பட்ட நிலையில், மாற்று வேலையாக அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் அனைவரும் சென்றதால் சரியான நேரத்திற்க்கு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: