நியூயார்க்;
மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ள 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளில் 58 சதவீதம் பேர் குழந்தைகள். அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அந்தக் குழந்தைகள் குறித்து ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) கடந்த 8 வாரங்களாக நடத்திய ஆய்வின் அறிக்கையை ஜெனிவாவில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் வெளியிட்டது. யுனிசெப் அறிக்கையில், “முகாம்களில் உள்ள குழந்தைகளில் 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அகதிகளுக்கு சுத்தமான நீர், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டும். சுத்தமான நீர் குடிக்காவிட்டால் காலரா போன்ற நோயால் பாதிக்கப்படுவர். குழந்தைகளுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை. அவர்கள் இந்த இடத்தை நரகமாக கருதுகின்றனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் யுனிசெப் அமைப்பானது ஈடுபட்டுள்ளது. ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவி செய்வதற்கு ஐ.நா. 434 மில்லியன் டாலர் நிதி திரட்டி வருகிறது. அதில் ஆறில் ஒரு பங்கு அங்குள்ள குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.