வீ. பா. கணேசன்
1952ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைக் கூட்டம் கூடியபோது தலைசிறந்த மக்கள் விஞ்ஞானியும் கல்கத்தா நகரிலிருந்து இடதுசாரிகளின் ஆதரவுடன் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான டாக்டர். மேக்நாத் சகா, சபாநாயகர் மாவ்லங்கரை நோக்கிப் பேசத் துவங்கினார். நல்ல நிறத்துடன் அவையில் வீற்றிருந்த அழகான ஓர் இளைஞரை சுட்டிக் காட்டிவிட்டு, டாக்டர். சகா சபாநாயகரிடம் கூறினார்: “ அந்த இளைஞர்தான் தசரத் தேவ். திரிபுரா மாநிலம் கிழக்கு திரிபுரா தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர். 1949இல் திரிபுரா இந்தியாவுடன் இணைவதற்கு முன்பிருந்தே ஆதிவாசிகளின் நலனுக்காக அரச பரம்பரையுடன் போராடி வருவதால் அவரை கைது செய்வதற்கான உத்தரவுடன் (வாரண்ட்) காவல்துறையால் தேடப்பட்டு வருபவர். 1946 முதல் இன்று வரை தலைமறைவாகச் செயல்பட்டு வருபவர்.

திரிபுரா மாநில ஆதிவாசி மக்களால் தலைமறைவாக இருக்கும்போதே மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திரிபுரா மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகும் கூட இன்றளவும் காவல்துறை அவரைக் கைது செய்ய முயற்சி செய்து வருகிறது. 1946இல் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் செயல்பட இன்றுவரை தடை செய்து வருகிறது. இந்த அவையின் சபாநாயகர் என்ற வகையில் அவரது உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” சபாநாயகர் மாவ்லங்கர் உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தனது கடமை என்று கூறிவிட்டு, அவரை கைது செய்வதற்குப் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்-ஐ உடனடியாக ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு உத்தரவிட்டார். அதன்பிறகே அந்தப் பிடி வாரண்ட் ரத்து செய்யப்பட்டு, தசரத் தேவ் ஆறு ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்.

1952ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது, திரிபுரா கிழக்குத் தொகுதியில் தோழர் தசரத் தேவ், திரிபுரா மேற்குத் தொகுதியில் தோழர் பிரேன் தத்தா ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். இவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய தோழர்கள் முசாபர் அகமது, ஜோதிபாசு ஆகியோரை கட்சியின் மத்தியக் குழு திரிபுராவிற்கு அனுப்பி வைத்தது.எனினும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நியமித்திருந்த திரிபுரா மாநில தலைமை ஆணையர் தலைநகர் அகர்தலாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள தெலியமுராவில் தோழர் தசரத் தேவிற்கு ஆதரவாக தோழர் ஜோதிபாசுவும், 35 கி.மீ. தூரத்தில் இருந்த பிஷ்ராம்கஞ்ச்-இல் தோழர் பிரேன் தத்தாவிற்கு ஆதரவாக தோழர் முசாபர் அகமதுவும் கூட்டங்களை நடத்தினர்.

இக்கூட்டங்களில் செங்கொடிகளை ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தோற்கடித்தனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு தசரத் தேவ் மாறுவேடத்தில் கல்கத்தா வழியாக தில்லி செல்வதற்கான ஏற்பாடுகளை தோழர் முசாஃபர் அகமது செய்து உதவினார். அதன்பிறகே மக்களவையில் டாக்டர். மேக்நாத் சகாவின் தலையீட்டில் தசரத் தேவ் மீது ஆறு ஆண்டுகளாக நீடித்து வந்த வாரண்ட் ரத்தானது.

இன்றைய இந்தியாவின் வடகிழக்கு எல்லையோரத்தில் உள்ள திரிபுரா மாநிலம் இந்தியாவுடன் 1949 அக்டோபர் 15 அன்று இணைவதற்கு முன்பு அப்பகுதி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த அரசரின் ஆளுகையில் இருந்தது. அரசர் ஆதிவாசியாக இருந்த போதிலும் தனது அமைச்சர்களாக, ஆலோசகர்களாக அக்காலத்தில் அதிகம்படித்த பிரிவினராக இருந்த வங்காளிகளையும், பிரிட்டிஷ், ஐரோப்பியர்களையுமே வைத்திருந்தார். தனது குடிமக்கள் என்றுமே கல்வியறிவு அற்றவர்களாக, தனக்கு அடிமைச் சேவகம் புரிபவர்களாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதை அனுதினமும் செயல்படுத்தி வந்தவர்.கல்வி என்பது அரச குடும்பத்தினர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. மாநிலத்தின் பெரும்பான்மையாக இருந்த, இந்த மேல்தட்டு பிரிவினரின் ஆடம்பரத்திற்காகவே நாளும் உழைத்து வந்த லட்சக்கணக்கான ஆதிவாசி மக்களோ முறையான கல்வியும், குடிநீரும், போக, வர பாதையும் இல்லாத கிராமங்களில் வாழ்ந்து வந்த நேரம் அது.

இத்தகையதொரு பின்னணியில்தான் தேவ்பர்மா என்ற ஆதிவாசிப் பிரிவைச் சேர்ந்த தசரத் தேவ்பர்மா 1916 பிப்ரவர் 2ஆம் தேதி கொவாய் வட்டத்தில் இருந்த ஆம்புரா என்ற கிராமத்தில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே படிப்பில் நாட்டம் கொண்டிருந்த போதிலும், அவரைப் படிக்க வைக்குமளவிற்கு வசதியில்லாத விவசாய பெற்றோரின் இயலாமையால் காலம் தாழ்ந்தே பள்ளியில் சேர முடிந்தது. கொவாய் என்ற அந்த சிறுநகரில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தார்.

சிறந்த மாணவராக விளங்கிய அவர் கொவாயில் ஒரு விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு வரை படித்தார். பின்பு அகர்தலாவில் இருந்த உமாகாந்த அகாதெமி என்ற பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்து பள்ளி இறுதிப் படிப்பான மெட்ரிகுலேஷன் முடித்தார். அப்போது திரிபுராவில் கல்லூரி எதுவும் இல்லாத நிலையில் கிழக்கு வங்காளத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் (பின்னர் பங்ளாதேஷின் ஒரு பகுதியாக ஆனது) ஹபிகஞ்ச் என்ற இடத்தில் இருந்த பிருந்தாவன் கல்லூரியில் இண்டர்மீடியட், பி.ஏ. படிப்பை முடித்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிக்கச் சேர்ந்தார். கூடவே சட்டம் பயிலவும் கல்லூரியில் சேர்ந்தார்.

அந்த நாட்களில் திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அமைப்பு ஏதுமில்லை. எனினும் 1940ஆம் ஆண்டில் வங்காள மாநிலக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு வங்காளத்தில் உள்ள கோமிலா மாவட்டக் குழு திரிபுராவில் கட்சியைக் கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. முதல் கிளை அகர்தலா நகரில் இருந்த சில இளைஞர்களையும், தோழர் பிரேன் தத்தாவையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகர்தலா நகரக் கிளை அங்கிருந்த உழைக்கும் மக்களை – அவர்களில் பெரும்பாலோர் வங்காளிகள் – அணிதிரட்ட பல்வேறு வெகுஜன அமைப்புகளை உருவாக்கியது. அரசாட்சி ஒருபுறமும், பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கமும் நிலவி வந்த அக்காலத்தில் ஆதிவாசிகள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகி வந்த போதிலும், அரசரை தங்கள் தெய்வமெனக் கருதி மிகுந்த பற்று கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். அரசாட்சியானது ஆதிவாசிகளுக்கு கல்வி என்ற காற்றே படக்கூடாது என்று கவனத்துடன் செயல்பட்டு வந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி ஆதிவாசிகளுக்கு கல்வியைப் புகட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

ஆதிவாசிகளில் ஓரளவிற்கு வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை வங்காளிகள் பெரும்பான்மையாக உள்ள சிறு நகரங்களில், தலைநகரான அகர்தலாவில் அரச குடும்பம் உருவாக்கியிருந்த பள்ளிகளில் படிக்க அனுப்புவார்கள். அதைப்போன்றே திரிபுராவின் எல்லைப் பகுதியான கிழக்கு வங்காளத்தின் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் அவர்கள் படித்து வந்தார்கள். தோழர் பிரேன் தத்தா ஆதிவாசி குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் நோக்கத்துடன் அன்று அகர்தலா நகரில் இருந்த உமாகாந்த அகாதெமியில் படித்து வந்த ஆதிவாசி மாணவர்களை அணுகி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். ஒரு சில ஆதிவாசி மாணவர்களே அதில் கலந்து கொண்டனர். கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் வாழும் ஆதிவாசி மக்களிடையே கல்வியை பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. படிப்படியாக ஓரளவிற்கு படித்த ஆதிவாசி மாணவர்களையும் இளைஞர்களையும் அணுகுவது என முடிவெடுக்கப்பட்டு, இதில் ஈடுபடுவதற்கான ஆதிவாசி இளைஞர்களை தேடத் துவங்கினர். அப்போது கல்கத்தாவில் மேற்படிப்பு படித்து வந்த தசரத் தேவ்பர்மாவிற்கும் அழைப்பு போனது. இந்தப் புனிதமான நோக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த தசரத் தேவ்பர்மா தனது மேற்படிப்பை நிறுத்தி விட்டு திரிபுரா விரைந்தார்.

1945 டிசம்பர் 27ஆம் தேதியன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனசிக்ஷா சமிதி (மக்கள் கல்விக்கான முன்னணி) தசரத் தேவ்பர்மாவை உதவித் தலைவராகக் கொண்டு துவங்கியது. இதில் படித்த, ஓரளவுக்குப் படித்த 11 ஆதிவாசி இளைஞர்கள் மட்டுமே உறுப்பினர்கள். எனினும் ஒரு சில மாதங்களிலேயே மாநிலம் முழுவதும் 400 இடங்களில் இந்த அமைப்பு பள்ளிகளைத் துவங்கியது. படித்த, ஓரளவிற்குப் படித்த ஆதிவாசி மாணவர்கள் இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களாக இருந்தனர்.

கிராமங்களிலும் மலைகளிலும் வசித்த மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் சொந்த உழைப்பில் பள்ளிகளுக்கான குடிசையை உருவாக்கியது மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கான தங்குமிடம், அவர்களுக்கான உணவு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றுக்கான செலவை தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டனர். தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைப்பதற்கான மகத்தான வாய்ப்பு என்ற வகையில் மாநிலம் முழுவதிலும் இருந்த ஆதிவாசி மக்கள் ஜனசிக்ஷா சமிதிக்கு ஆதரவாக அணிதிரண்டார்கள். இத்தகைய பேராதரவின் விளைவாகவே ஒரு சில மாதங்களில் அந்த அமைப்பால் 400 பள்ளிகளை மாநிலம் முழுவதிலும் உருவாக்க முடிந்தது.

இந்தப் பள்ளிகளை உருவாக்கி நடத்தியது மட்டுமின்றி, இவற்றை அரசாட்சி அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஜனசிக்ஷா சமிதி கோரிக்கை எழுப்பியது. இதன் ஒரு பகுதியாக அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரு. ப்ரவுன் என்ற ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தது. தானே நேரடியாகச் சென்று இந்தப் பள்ளிகளைப் பார்வையிட்ட திரு. ப்ரவுன் அவற்றில் 300 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கினார்.

தனது காலடியில் தூசாக இருக்கும் ஆதிவாசிகளுக்கு கல்வி வாடையே படக்கூடாது; அப்படி அவர்கள் கல்வியறிவைப் பெற்றுவிட்டால் தன் ஆட்சிக்கு எதிர்ப்புகள் எழத் துவங்கும் என்ற எண்ணத்தில் இருந்து வந்த அரசரான மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் தேவ்பர்மனுக்கு இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய கல்வி அமைச்சரின் மீது கடும் கோபம் எழுந்தது. அரசருக்கும் அமைச்சருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிரிட்டிஷ்காரரான திரு. ப்ரவுன் பதவியிலிருந்து விலகி, மாநிலத்தை விட்டே வெளியேறினார்.

1946ஆம் ஆண்டு அரசர் தனது காவல் அதிகாரிகளை அழைத்து ஜனசிக்ஷா சமிதியின் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்ட அதே நேரத்தில் ஆதிவாசி கிராமங்களின் தலைவர்களான சர்தார் என்பவர்களின் கூட்டம் ஒன்றையும் கூட்டினார். ஜனசிக்ஷா சமிதிக்குப் போட்டியாக திரிபுர் சங்கா என்ற அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த சர்தார்களில் ஒரு சிலர் இந்த மாநாட்டிற்கு ஜனசிக்ஷா சமிதியின் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக கோரிக்கை விடுத்தனர்.

சர்தார்களின் நெருக்கடியால் சமிதியின் பொதுச்செயலாளரான ஹேமந்த தேவ்பர்மா உள்ளிட்ட சில தலைவர்களை மாநாட்டிற்கு அழைக்க அரசர் ஒப்புக் கொண்டபோதிலும், சமிதியின் செயலாளர் ஹேமந்த தேவ்பர்மா உள்ளிட்ட தலைவர்களை மாநாட்டிற்கு முதல் நாள் இரவு போலீஸ் கைது செய்து ஹேமந்த தேவ்பர்மாவை கடுமையான சித்தரவதைக்கு ஆளாக்கியது. மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த சர்தார்கள் இடையே கடுமையான கண்டனக் குரல் எழத் துவங்கியது.

சமிதி தலைவர்கள் விடுதலை செய்யப்படவில்லையெனில் மாநாட்டை புறக்கணிப்பது என சர்தார்கள் முடிவு செய்தனர். அவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறெந்த வழியும் அரசருக்கு இருக்கவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேலே குறிப்பிட்டபடி மக்களவை சபாநாயகரின் உத்தரவுப்படி அவரை கைது செய்வதற்கான வாரண்ட் ரத்து செய்யப்படும்வரை தசரத் தேவ்பர்மா தலைமறைவாகவே செயல்பட்டு வந்தார்.

Leave A Reply

%d bloggers like this: