வெங்கரா சட்டமன்ற உபதேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் (யு.டி.எப்.) முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ.காதர் பெற்ற வெற்றியானது அந்தக் கூட்டணிக்கோ – ஏன், காதரினுக்கோக்கூட மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இந்த உபதேர்தலில் 14,747 வாக்குகள் அவர் குறைவாகவே பெற்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட கால் லட்சத்திற்கு மேல் வாக்குகள் பதிவு ஆகியிருந்தபோதிலும் அப்போது பெற்ற வாக்குகளைவிட அதிகமாக ஓர் அங்குலம்கூட இந்த யுடிஎப் கூட்டணி வேட்பாளரால் முன்னேற முடியவில்லை. மாறாக, ஆறரை சதவீத வாக்குகளை அவர் இழந்துவிட்டார். வெங்கரா சட்டமன்றத் தொகுதியின் ஆறு பஞ்சாயத்துகளிலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்றதைவிட இந்த யு.டி.எப் வேட்பாளருக்குத் தற்போது பெரும்பான்மை குறைந்துவிட்டது. அதாவது, யுடிஎப் வெற்றிபெற்றபோதிலும் அது பிரிக் விக்டரி – அதாவது பரிதாபமான வெற்றி என்று அர்த்தம். ரோமானியர்க்கு எதிரான யுத்தத்தில் யவன தேசத்து ராஜாவாகிய பிரிக் வெற்றிபெற்ற போதிலும் அது தோல்விக்குச் சமமாக இருந்தது.

அந்த நிலைமைதான் வேங்கராவில் முஸ்லிம் லீக்கிற்கும் யுடிஎப்-புக்கும் ஏற்பட்டது. சோலார் வழக்கில் சிக்கி உழல்கிற யுடிஎப்பின் முகத்தில் விழுந்த பலத்த அடிதான் வெங்கரா தேர்தல் முடிவு.கேரள அரசியலில் முஸ்லிம் லீக்கிற்குப் பலவீனம் பற்றிக்கொண்டதென்றால் காங்கிரஸ் தலைமையில் உள்ள யுடிஎப் கூட்டணிக்கும் பலவீனம் பற்றிக்கொண்டது என்று அர்த்தம். காங்கிரஸைக் கழித்துப் பார்த்தால் யுடிஎப்-பில் உள்ள மிகப் பெரிய கட்சி முஸ்லிம் லீக்தான். கே.எம்.மணி காங்கிரஸ் யுடிஎப் கூட்டணியைவிட்டு விலகியவுடன் லீக் ஏணியில் ஏறித்தான் யுடிஎப் தப்பித்துக்கொள்கிறது.ஆனால் முஸ்லிம் லீக் காலின் கீழே மண்ணரிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்குத் தெளிவான செய்தியைச் சொல்லுகிறது வெங்கரா. லீக்கிற்குப் பின்னால் அணிதிரண்டிருந்த சாதாரண மக்கள் பாதுகாப்பை விரும்பி இடதுசாரிப் பக்கம் வரும்போது மற்றொரு சிறு பகுதியினர் மததீவிரவாத இயக்கத்தின் பக்கம் ஆகர்ஷிக்கப்படுகிறார்கள்.

நாட்டில் மோடி அரசின் காலத்தில் சாதாரண முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள். மோடி அரசை இயக்குகிற ஆர்எஸ்எஸ்ஸும் அதன் பரிவார் அமைப்புகளும் மாட்டுக்கறி, பசு, லவ் ஜிகாத் ஆகியவற்றின் பேரால் சிறுபான்மையினரை – குறிப்பாக முஸ்லிம்களை வேட்டையாடுகிறார்கள். அதை எதிர்க்கவோ, எதிர்கொள்ளவோ முஸ்லிம் லீக்கினாலோ அது அங்கம் வகிக்கிற யுடிஎப் கூட்டணியாலோ முடியவில்லை. அதுமட்டுமல்ல, லீக் எம்.பி.க்கள் பிஜேபியின் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்காமல் விலகி நின்றனர்.சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக உறுதியுடன் நிற்கவும் போராடவும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசும் முதலமைச்சர் பினராயி விஜயனும் முன்வந்தனர். அதற்கான அங்கீகாரமாகத்தான் வெங்கராவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் பஷீர்க்கு வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தது. ஏப்ரலில் நடைபெற்ற மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலைக் காட்டிலும் 8,642 வாக்குகள் இம்முறை வேங்கராவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருக்குக் கிடைத்தது. 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் 6793 வாக்குகள் இம்முறை அதிகமாகக் கிடைத்தன. இவர் இம்முறை கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.

அமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வெங்கரா  இடது ஜனநாயக முன்னணிக்கு போதிய செல்வாக்கு உள்ள தொகுதி அல்ல. என்றாலும், இந்தத் தொகுதியிலும் இடதுசாரியும் சி.பி.எம்-மும் மக்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டுவருகிறது என்பதை இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக்குகிறது. மலப்புரம் மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக சி.பி.எம்.-க்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் வாக்குகள் படிப்படியாகவாவது அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற உபதேர்தலிலும் யுடிஎப் (காங்கிரஸ் கூட்டணி) வாக்குகள் குறைந்தபோது இடது ஜனநாயக முன்னணியின் வாக்குகள் அதிகரித்துள்ளன. மலப்புரம் மாவட்டத்தில் ஏற்படும் பார்வைக்குப் புலப்படாத அரசியல் அடிக் கசிவுகளையே இது சுட்டிக்காட்டுகிறது. மக்கள் சாதி-மத அரசியலிடமிருந்து விடைபெறவும் ஒதுங்கிநிற்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதும், மதச்சார்பற்ற அரசியலுக்கு மெதுவாகவாவது வரவேற்பு கிடைக்கிறது என்பதுமான செய்தியையும் வெங்கரா தேர்தல் முடிவு தெரிவிக்கிறது.

அதேசமயம், இந்தத் தேர்தலில் பெருத்த அடி கிடைத்தது நாட்டை ஆளுகிற கட்சிக்குத்தான். இந்துத்துவா அரசியல் கொடியைக் கேரளத்திலும் உயர்த்துவதற்கான படிக்கல்லாகும் என்று கருதிய இந்த உபதேர்தலில் ஓர்அங்குலம்கூட முன்னேற முடியவில்லை என்பது மட்டுமல்ல, வெகுதூரம் பின்னோக்கியும் போய்விட்டது. பிஜேபியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், கேரள பிஜேபியின் தலைவர் கும்மனம் ராஜசேகரனும் ‘சிவப்பு பயங்கர’மும் ‘ஜிகாத் பயங்கர’மும் என்ற சொற்றொடரை முழக்கமாக்கி கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் வரை ஜனரக்ஷா யாத்திரை நடத்துகிற வேளையில்தான் வெங்கரா தேர்தலில் அவர்களின் கட்சி படுமோசமான விளைவைச் சந்தித்தது. கேரளத்திற்கு அந்நியமான முழக்கத்தை எழுப்பியதை மட்டுமல்ல, பிஜேபி எழுப்புகிற துவேஷ அரசியலையும் கேரள மக்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், அத்தகைய அரசியலுக்குக் கேரள மண்ணில் இடம் இல்லை என்றும் வெங்கரா உரத்துக் கூறுகிறது. பிஜேபி வேட்பாளர் கே.ஜனசந்திரனுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 5728 மட்டுமே. அதுவும் கடந்த தேர்தலில் பெற்றதைவிட 1329 வாக்குகள் குறைவு. இந்த என்.டி.ஏ.கூட்டணி பிஜேபி வேட்பாளருக்குக் கிடைத்தது நாலாவது இடம்தான்!

மூன்றாவது இடம் பெற்றது எஸ்டிபிஐ கட்சி. இக்கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் கே.சி.நசீருக்கு 8648 வாக்குகள் கிடைத்தன. இங்கே பெரும்பான்மை தீவிரவாதத்திற்குச் சமமாக சிறுபான்மை தீவிரவாதமும் மெதுவாகவாவது செல்வாக்குப் பெறுகிறது என்பதையே இது காட்டுகிறது. ஆர்எஸ்எஸ்-ஸைப் போலவே எஸ்டிபிஐ-யின் அரசியலையும் நுட்பமாக ஆராய்ந்து அம்பலப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே மதச்சார்பற்ற அரசியலுக்கு மலப்புரத்தில் ஆழமாக வேரூன்ற முடியும் என்று வெங்கரா தேர்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது.

– தேசாபிமானி மலையாள நாளிதழ் தலையங்கம் (16.10.2017)
தமிழில்: தி.வரதராசன்

Leave A Reply

%d bloggers like this: