==ரிஷி. சரவணன்===
ஆதிக்க சக்திகளால் வரலாற்றில் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட உண்மைகள் பல. அவ்வுண்மைகளில் ஒருவர்தான் ‘மேக்நாட் சாகா’. வங்க மண் தந்த ஆளுமைகளில் ஒருவர் மேக்நாட் சாகா. அறிவியல் ஆய்வாளர், விடுதலை வீரர், சோசலிச செயல்பாட்டாளர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர், பொருளாதார நிபுணர், கட்டமைப்பாளர், உலக அமைதிப் போராளி, நாடாளுமன்றவாதி என பல தளங்களில் தன் முத்திரை பதித்தவர். நான்கு முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்.நவீன இந்தியா உலக அறிவியலுக்கு அளித்த முக்கிய முதல் பங்களிப்பு சாகாவின் ’வெப்ப அயனியாக்க கோட்பாடு’ ஆகும். ’ஃபிலசாபிகல் மெகசின்’ எனும் இதழில் 1920 ஆம் ஆண்டு வெப்ப அயனியாக்க கோட்பாட்டையும் அதன் சமன்பாட்டையும் வெளியிட்டார். ’ராமன் விளைவு’ கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே வெளியிடப்பட்ட ’அயனியாக்க கோட்பாடு’ அவரை நவீன வானியற்பியலின் (astrophysics) தந்தையாக உயர்த்தியிருக்கிறது.
06.10.1893இல் அன்றைய கிழக்கு வங்கத்தின் டாக்கா நகருக்கு வடக்கே 45 கி.மீ. தொலைவில் பானசி நதிக்கரையில் உள்ள சியரத்தாலி எனும் சிற்றூரில் ஜெகந்நாத் சாகா – புவனேவரி தேவி தம்பதியருக்கு 5வது குழந்தையாகப் பிறந்தார். 2 அண்ணன்கள், 2 மூத்த சகோதரிகள், 1 தங்கை, 2 தம்பிகள். ஏழ்மையில் பிறந்திருந்தாலும் படிப்பில் சிறந்து விளங்கினார். ஆரம்ப கல்வியை தனது கிராமத்திலும் அடுத்த இடைநிலை கல்வியை சிமுலியாவில் தொடர்ந்தார்.
அனந்த குமார் தாஸ் எனும் ஆயுர்வேத மருத்துவர் உதவியால் இடைநிலை படிப்பை தொடர்ந்தார். இடைநிலை படிப்பில் கல்வி மாவட்டத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதால் அடுத்து படிக்க மாதம் 4 ரூபாய் உதவித்தொகை கிடைத்தது. மாதம் ஒன்றுக்கு மாதத்திற்கு ரூ. 15/- தேவைப்பட்ட காலத்தில் தனது படிப்பை மூத்த அண்ணன் ஜெய்நாத் அனுப்பிய ரூ. 5/-, உதவித்தொகை ரூ. 4/-, சாதி சங்கம் கொடுத்த ரூ. 2/- ஆக மொத்தம் ரூ. 11/- கொண்டு பள்ளி கல்வியை தொடர்ந்தார். பிரித்தாளும் சூழ்ச்சியில் 1905 இல் அந்நிய ஆட்சி வங்கத்தை இரண்டாக பிரித்தது. தேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.12 வயது மாணவன் சாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் அவர் படித்த டாக்கா கல்லூரி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கல்வி உதவித் தொகையும் பறிக்கப்பட்டது. அவரது நடத்தை சான்றிதழில் ‘திருப்தியற்றது’ என பதிக்கப்பட்டது. ஆனாலும் தேசிய உணர்வுள்ள ஒரு தனியார்பள்ளி (கிஷோரி லால் ஜூப்ளி உயர்நிலை பள்ளி) அவரை தன் கல்வியை தொடர அனுமதித்து கல்வி உதவித்தொகைக்கும் ஏற்பாடு செய்தது. சிறப்பாக கற்று 1909ஆம் ஆண்டு நடந்த பள்ளி இறுதி பொதுத்தேர்வில் கிழக்கு வங்கத்திலேயே முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்.
டாக்கா அரசு கல்லூரியில் ஐ.எஸ்.சி. எனும் இடைநிலை அறிவியல் வகுப்பில் சேர்ந்து பல்கலைக்கழக அளவில் கணிதம் மற்றும் வேதியியல் முதல் நிலையும் ஒட்டு மொத்த தேர்வில் மூன்றாம் நிலையும் பெற்றார். தொடர்ந்து 1911இல் பி.எஸ்.சி. படிக்க புகழ் பெற்ற கல்கத்தா மாநில கல்லூரியில் சேர்ந்தார். 1913ஆம் ஆண்டு தாமோதர் நதியால் வங்கத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது சக மாணவர்களுடன் சென்று வெள்ள நிவாரண பணியில் கலந்து கொண்டார்.
சத்தியேந்திரநாத் போஸ், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ஆகியோர் இவருடைய கல்லூரி தோழர்கள். ஜகதீஸ் சந்திர போஸ், பி.சி. ராய், டி.என். மல்லிக் போன்றோர் இவருடைய கல்லூரி ஆசிரியர்கள் ஆவர். பி.எஸ்.சி. (ஆனர்ஸ்) கணிதப் படிப்பில் எஸ்.என். போஸ் முதலிடத்தையும் இவர் இரண்டாமிடத்தையும் பெற்றனர். எம்.எஸ்.சி. கலப்பு கணிதத்திலும் இருவருக்கும் இதே நிலைதான். 1918இல் ‘கதிர் வீச்சு அழுத்தம் மற்றும் மின்காந்த கோட்பாடு’ குறித்த ஆய்வுக்காக முனைவர் படம் பெற்றார்.பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் விடுதியில் அவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என மற்ற உயர் சாதி இந்துக்களால் அவமதிக்கப்பட்டார். இப்படியான அவமதிப்புகள் இவரை இந்திரனை குறிக்கும் ’மெகநாத்’ எனும் தன் பெயரை இராவணனின் மகனை குறிக்கும் ’மேக்நாட்’ என மாற்றிக்கொள்ள வைத்தது. பள்ளி நாட்களில் பைபிளை கற்று பாப்டிஸ்ட் மிசினரி நடத்திய தேர்வில் ஒட்டு மொத்த பள்ளி கல்லூரி மாணவர்களில் முதலிடம் பிடித்தார். அதற்காக அவருக்கு ரூ. 100/- ம் ஒரு பைபிள் நூலும் பரிசாக கிடைத்தது. அந்த பணம் அவருக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும். பிற்காலத்தில் அனைத்து மத நூல்களிலும் ஆழமான அறிவை வளர்த்துக் கொண்டார். சமஸ்கிருதத்தை நன்கு கற்று வேதங்கள் உட்பட அதன் இலக்கியங்களை விரிவாக படித்து அவற்றை கடுமையாக விமர்சனம் செய்தார். சாகா ஓர் அறிவியல்பூர்வ கடவுள் மறுப்பாளராக இறுதிவரை வாழ்ந்தார்.
1918இல் ராதாராணி என்பவரை மணந்து கொண்டார். இத்தம்பதியினருக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள். இவர்கள் அனைவருமே உயர்க் கல்வி கற்றவர்கள். சாகா ஒரு கண்டிப்பான பேராசிரியராக இருந்த போதிலும் தன் மாணவர்கள் மீது அளவுகடந்த அன்பை காட்டியவர். தன் எளிய உறவினர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கி இருக்க அலகாபாத்தில் ஒரு பெரிய வீட்டை கட்டி உதவியவர். ஏழை மாணவர்கள் தங்கி படிக்க தன் வீட்டை ஒரு உண்டு உறைவிடம் போலாக்கினார்.
இந்தியாவில் தேர்தல் மூலம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு பெற்ற ஒரே அறிவியலாளர் இவரே. 1951இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் கல்கத்தா வட மேற்கு தொகுதியில் சுயேச்சையாக நின்று அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளரை காட்டிலும் 16.43ரூ அதிகம் பெற்று 53.05ரூ வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
சாகா 1917 இல் விண்மீன்களின் வளிமண்டலத்தில் நடைபெறும் ’தெரிவுசெய் கதிர்வீச்சு அழுத்தம்’ குறித்த தன் கோட்பாட்டை உருவாக்கினார். ஆயினும் அக்கோட்பாடு குறித்த ஆய்வு கட்டுரை அதிக பக்கங்களை கொண்டிருந்ததால் அதன் வெளியீட்டு செலவை அவர் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது வெளியிடப்படும் என சிகாகோ பல்கலைக்கழகத்தின் ‘அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல்’ கூறிவிட்டது. அச்செலவானது அவரின் சம்பளம் போல 10 மடங்காக இருந்ததால் அது இயலவில்லை.
பின் அவர் அக்கட்டுரையின் சாரத்தை சிறிய குறிப்பாக எழுதி அதே இதழுக்கு அனுப்பி அது 1919இல் வெளிவந்தது. அக்குறிப்பை படித்த பிரிட்டன் அறிவியலாளர் ஈ.ஏ. மில்ன் தன் ஆய்வு பொருளாக ஆய்வு செய்து நேச்சர் இதழில் வெளியிட்ட பின் அக்கோட்பாடு மில்ன் பெயரில் அழைக்கப்பட்டது. இத்தனைக்கும் மில்ன் தனது கட்டுரையின் அடிக்குறிப்பில் இந்த பத்திகள் அசலாக சாக முன்வைத்த குறிப்புகளிலிருந்து உருவாக்கப்பட்டவை என குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய காலத்தில் நூற்றுக்கும் மேலான ஆய்வு கட்டுரைகளில் மேலை நாட்டு அறிவியல் அறிஞர்களால் சாகா மேற்கோள் காட்டப்பட்டார். 1919 இல் வெளியான ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்டை முதன் முதலில் ஜெர்மனிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் தன் நண்பரும் இயற்பியல் விரிவுரையாளருமான சத்தியன் போஸுடன் இணைந்து மொழிபெயர்த்தார். அது அதே ஆண்டு கல்கத்தா இயற்பியல் துறை மூலமாக வெளியிடப்பட்டது. 1927இல் பல எதிர்ப்புகளுக்கிடையே லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினர் ஆக்கப்பட்டார்.
ஆரம்ப காலத்தில் வானியற்பியலில் இருந்த தன் கவனத்தை பிற்காலத்தில் அணுவியற்பியலின் பக்கம் சாகா மாற்றிக்கொண்டார். கல்கத்தாவில் இந்தியாவின் முதல் சைக்ளோட்ரான் கருவியை நிறுவ 1940லிருந்து பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். ஆயினும் அவர் வாழ்நாளில் அது துவங்கி செயல்படுவதை காணாமல் 16.02.1956 அன்று மறைந்தார். தன் வாழ்நாளில் 119 அறிவியல் சார்ந்த கட்டுரைகளும், அறிவியல் ஆய்வுகள் குறித்து 8ம், மனித வாழ்கையும் அறிவியலும் பற்றி 12ம், அறிவியல் தொடர்பான பத்திரிகை செய்திக் கட்டுரைகள் 9ம், தேசிய பிரச்சனைகளில் ஆற்று மேலாண்மை பற்றி 13ம், ஆற்றல், எரிபொருள், மின்சாரம் சார்ந்த 9ம், வளங்கள் பற்றி 3ம், தொழில்மயமாக்கம் பற்றி 10ம், திட்டமிடல் பற்றி 18ம், போரும் பஞ்சமும் பற்றி 4ம், கல்வி பற்றி 8ம், மாநிலங்கள் மறுசீரமைப்பு பற்றி 8ம், அகதிகள் மறுவாழ்வு பற்றி 5ம், கால வரிசையியல்/நாட்காட்டி சார்ந்து 10ம், அமைப்புகள் நிறுவனங்கள் பற்றி 24ம், இதர ஆளுமைகள் பற்றி 15ம், மொழிபெயர்ப்பு பற்றி 2ம், பயணம் பற்றிய ஒன்றும் என 278 கட்டுரைகளும் 5 நூல்களும் வெளியிட்டுள்ளார். இப்படியாக சமூகத்தின் கவனத்திலிருந்து மறைக்கப்பட்ட மறக்கடிக்கப்பட்ட இம்மாமனிதரை பற்றி மேலும் அறிந்துகொள்ள தமிழில் வெளியான தேவிகபுரம் சிவா எழுதி பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட ‘மேக்நாட் சாகா – ஒரு புரச்சிகர விஞ்ஞானியின் கதை’ எனும் புத்தகத்தை வாசிக்கவும். 288 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.230/- மட்டுமே. இந்நூலை உருவாக்குவதில் தேவகாபுரம் சிவாவின் இடைவிடா முயற்சியும் அதிகபட்ச உழைப்பும் போற்றுதலுக்குறியது.

Leave a Reply

You must be logged in to post a comment.