ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி பட்டினியால் உயிரிழந்தைதைத் தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என மாநில உணவுத்துறை அமைச்சர் கூறி உள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகறிது. ஜார்கண்ட் மாநிலம் சிம்டெகா மாவட்டத்தை சேர்ந்த கரிமதி கிராமத்தில் வசிக்கும் 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்தார்.   இவரது குடும்ப ரேசன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத காரணத்தால் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.   இதனால் உணவு கிடைக்காமல் சிறுமி இறந்ததாக உணவு உரிமை பிரச்சார ஆர்வலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.  துர்கா பூஜை விடுமுறை தினங்களில் பள்ளியில் மதிய உணவும் கிடைக்காமல் சந்தோஷி குமாரி என்ற அந்த சிறுமி பசியால் 8 நாட்களாக அவதிப்பட்டுள்ளார்.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி ரேசன் பொருட்கள் வாங்க இந்த குடும்பம் முழுத்  தகுதி பெற்றுள்ளது. ஆயினும் இவர்களின் குடும்பத்துக்கு ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டு இணைக்காத காரணத்தால் கடந்த ஆறு மாதங்களாக  பொருட்கள் வழங்க மறுத்துள்ளனர்.   கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய அரசு ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. அரசு மானியம் பெற வேண்டுமெனில் ஆதார் அத்தியாவசியம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதில் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் உணவு பொருட்களும் அடங்கியள்ளது.
அரசு மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் ஜார்கண்ட் அரசு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி வருகிறது. லேட்கர் மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலரே இது தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பொது விநியோக திட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.   இந்த நீக்கத்தின் காரணமாக தான் சந்தோஷிகுமாரி பலியாகி உள்ளார் என்று தீரஜ்குமார் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 11.5 லட்சம் கார்டுகள் இதுவரை நீக்கப்பட்டுள்ளதாக அரசுத்தகவல் தெரிவிக்கிறது.  இந்நிலையில் இன்று ஜார்க்கண்ட் மாநில உணவுத்துறை அமைச்சர் சரயுராஜ் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என கூறி உள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி டிவிட்டரில் பதிவாகி பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பதிலாக ஒருவர், “இப்போது அந்த இறந்த சிறுமியை உயிருடன் கொண்டு வர முடியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.  அரசின் மெத்தனத்தினால் தான் அந்த சிறுமி மரணம் அடைந்தார் என குற்றம் சாட்டி உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: