ஹைதராபாத்;                                                                                                                                                                               பிராமண உயர்கல்வி மாணவர்கள், தொழில் முனைவோர், தொழிலபதிபர்கள், தொடங்கி கோயில் அர்ச்சகர் வரை பிராமணர்கள் அனைவருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, பிராமண அர்ச்சகரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.தெலுங்கானாவில் உள்ள கோவில் அர்ச்சகர்களுக்கு திருமணம் நடைபெறுவது பெரும் சிக்கலாக உள்ளது; அர்ச்சகர்கள் மற்றும் வேதம் ஓதும் நபர்களுக்கு கிடைக்கும் குறைந்தளவு ஊதியமே அதற்கு காரணம் என்பதால், ரூ. 3 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்படுவதாக ஆளும் தெலுங்கானா ராஷ்ரிய சமிதி அரசு காரணம் கூறியுள்ளது.

பொதுவாக, சாதிமறுப்புத் திருமணங்களை செய்வோருக்குத்தான், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் ஊக்கத் தொகை வழங்கி வருகின்றன. மாறாக, சொந்த சாதிக்குள் திருமணம் செய்து கொள்வதற்கு- அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு நிதியுதவி வழங்கி தெலுங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிராமணர்கள் சுயசாதி திருமணத்தில் காட்டும் பிடிவாதம்தான், பிராமணர் சமூகத்தில் மாப்பிள்ளை கிடைப்பதற்கும், பெண் கிடைப்பதற்கும் பெரிய சிக்கலாக இருக்கிறது.தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற சாதிய மனோபாவம்தான் இதன் அடிப்படை. அதை மறைத்து, அர்ச்சகர்கள் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்ற பெயரில், அரசு கஜானாவிலிருந்து தலா ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொடுக்கும் திட்டத்தை சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பின் கூட்டம் அதன் தலைவர் கே.வி. ரமணச்சாரி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதனன்று நடைபெற்றது. இதில், கோவிலில் ஆன்மீக பணியாற்றும் குருக்களுக்கும் வேதம் ஓதுபவர்களுக்கும் யாரும் பெண் கொடுப்பதில்லை; தங்களை கீழாக பார்க்கின்றனர் என்று பிராமணர்கள் கவலையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்தே, பிராமணர்களின் கவலையைப் போக்கும் விதமாக கோவில் அர்ச்சகர்கள், மற்றும் வேத பண்டிதர்களை திருமணம் செய்துகொள்ளும் மணமகள்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இந்த பணம், திருமணத்திற்கு பின் இருவரின் பெயரிலும் ஜாய்ண்ட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டு ஃபிக்ஸடு டெபாஸிட்டாக 3 லட்சம் ரூபாய் இருப்பு வைக்கப்படும். தம்பதிகள் திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்தே இந்த தொகையை பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திருமண செலவுக்காக முன்கூட்டியே ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராமணர் தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை ஊக்குவிப்பதற்காக பிராமண தொழில்துறை கைத்தொழில் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்பிய 59 பேருக்கு 3.29 கோடி ரூபாய் நிதியுதவியும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, இண்டர்மீடியட், டிகிரி மற்றும் பி.ஜி. படிக்கும் 252 பிராமண மாணவர்களுக்கும் தெலங்கானா அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. வெளி நாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயிலும் ஆர்வம் கொண்ட 56 பிராமண மாணவர்களுக்கு ரூ. 1.16 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத் திட்டங்களும் ஏழை பிராமணர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் இந்த நலத்திட்டங்களை ஏழை பிராமணர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: