எஸ்.நவமணி                                                                                                                                                                                 1917 ஆம் ஆண்டில் ரஷ்யநாட்டில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் (நவம்பர் புரட்சி) நூற்றாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளால் சோஷலிசவாதிகளால் முற்போக்கு சிந்தனையாளர்களால் நினைவு கூறப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தியாவிலும் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இந்த இரண்டு நாட்களும் யுகப்புரட்சி 100 என்ற தலைப்பில் கருத்தரங்கம் கலைஇரவு ரஷ்ய படவிழா நடத்தப்பட்டது. தமுஎகச மாநிலக்குழுவும் திருவாரூர் மாவட்டக்குழுவும் இணைந்து நடத்திய இந்த விழாக்களில் பங்கேற்ற தமிழகம் முழுவதிலுமிருந்து சங்க தலைவர்கள் படைப்பாளிகள் விமர்சகர்கள் அமைப்பாளர்கள் என் நூற்றுக்கணக்கானோர் சங்கமித்தனர்.
முதல்நாள் சனிக்கிழமையன்று (அக்.14) காலை 9.30 மணியளவில் திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கிளையின் பொருளாளர் ஜி.வரதராஜன், திரு.வி.க. சிலைக்கு வரவேற்புக்குழு தலைவர் சு.தியாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தகூடியிருந்தவர்களின் லட்சிய முழக்கங் களோடு ஹோட்டல் செல்வீஸ் கருத்தரங்க அரங்கிற்கு அணிவகுத்தனர்.
சோவியத் இலக்கியங்களை குறித்து கருத்தரங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் சோலைசுந்தரபெருமாள் தலைமையில் தொடங்கியது.அவர் தனது தலைமையில் உரையில் வர்க்க வேறுபாடுகளை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திய மண்ணில் இந்த விழா நடைபெறுவது பொருத்தமானது என்று கூறினார். மாவட்டச் செயலாளர் இரா.தாமோதரன் திருவாரூர் மாவட்டத்தில் இந்த விழாவை நடத்துவதற்கு வாய்ப்பளித்த மாநிலக்குழுவிற்கு நன்றி தெரிவித்து வரவேற்பு உரையாற்றினார்.
மாவட்டத்தலை வர் கு.வேதரத்தினம் மாவட்டத்துணைச்செய லாளர் மு.சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையேற்றனர். கருத்தரங்கை தொடங்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் கீரனூர் ஜாகீர்ராஜா பேசினார். மார்க்சீய அழகியல் குறித்தும் டால்ஸ்டாய் மக்சிம் கார்க்கி போன்றோரின் இலக்கிய பங்களிப்பு குறித்தும் அதன் வழிதோன்றலாக தமிழகத்தில் எழுதிவரும் எழுத்தாளர்கள் குறித்தும்  எடுத்துரைத்தார். மேலும் தான் வாசித்த படைப்புகளின் சமூக பார்வை குறித்தும் எளிய நடையில் அழகுற பேசி கருத்தரங்கின் துவக்கத்திற்கு அடியெடுத்து கொடுத்தார்.
இப்பணியில் சிறந்த சேவையாற்றி வரும் பாரதி புத்தகாலயம் என்சிபிஎச் போன்ற பதிப்பகங்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய மாநிலத்துணைத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் இந்த கருத்தரங்கம் நடத்துவதற்கு மிகவும் பொருத்தமான இடம் திருவாரூர் என்றும் இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பு இந்த மாவட்டத்தில் எத்தகையது என்றும் கூறி உரையை தொடர்ந்தார்.
1990 ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சித்தலைவர் தோழர் லெனின் சிலை அகற்றப்பட்டபோது உலகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஏகாதிபத்தியவாதிகள் முடிந்தது மார்க்சீயம், கம்யூனிசத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் கொக்கரித்தார்கள். முதலாளித்துவ
ஊடகங்கள் இதனை பெரிதாக கொண்டாடி னர். அப்போது திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மூத்தத்தலைவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா “ஏ கோர்ப்ப சேவ் நீ லெனினது சிலையை அகற்றலாம் ஆனால் எங்களை போன்ற கோடானகோடி தோழர்களின் மூளைகளில் பதிந்துள்ள லெனினை உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கர்ஜித்தார்.
அப்போது கூடியிருந்த கூட்ட த்தினர் உணர்வுப்பூர்வமான முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பலசுவையான தகவல்களை “புரட்சி எழுதிய புதினங்கள்” என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து “கன்னிநிலத்தின் கதைகள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மணிமாறன்,
“தமிழ் எழுத்துலகை மீட்டிய சோவியத் படைப்புகள்” என்ற தலைப்பில் எழுத்தாளர்
ந.முருகேசபாண்டியன், “புரட்சி வரைந்த கவிதைகள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஸ்ரீரசா ஆகியோர் பேசினர். ரஷ்ய இலக்கியங்கள் நாவல்கள் எப்படி வாசிப்பாளர் களுடன் பேசியது உரையாடியது வருடிக்கொடுத்தது கோபம்கொள்ள செய்தது என மணிமாறன் தனது வாசிப்பு அனுபவங்களை சுவைப்பட கூறினார்.
எழுத்தாளர் முருகேச பாண்டியன் சோவியத் இலக்கியங்களால் கவரப்பட்டு தமிழகத்தில் உருவான பல்வேறு எழுத்தாளர்களை பட்டியலிட்டு கூறியதுடன் ஹிட்லரின் பாசிசம் முன்னேறியது கூட அந்நாட்டு மக்களின் ஆதரவோடுதான் எனவே மக்களை நல்ல வழிக்கு கொண்டு செல்ல நாட்டை பாதுகாக்க மிகபெரிய போராட்டததை நடத்துவது எழுத்தாளர்களின் கடமையாகும் என்றார். ஸ்ரீரசா பேசுகையில், சோவியத் ரஷ்ய இலக்கியங்களில் கவிதைக் கான இடம் கொஞ்சமாகவே உள்ளது. இந்த கவிதைகளை தேடி ஒருங்கிணைத்து நம் மக்களிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என உறுதியேற்றார்.
ச.தமிழ்செல்வன்
“சிறுகதைகளுக்குள் பெருங்கதைகள்” என்ற தலைப்பில் பேசிய மாநிலத்தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது சொல்லாடல் மூலமாக இந்த தலைப்பையே பெருங்காவியமாக மாற்றிக்காட்டினார். சோவியத் ரஷ்யா இலக்கியங்களுக்காக அதிலும் குறிப்பாக குழந்தை இலக்கியங்களுக்காக அளித்த பங்களிப்பு மகத்தானது. உலகமொழிகளிலெல்லாம் மலிவு விலைக்கு புத்தகங்களை அச்சடித்து கொடுத்து சாதனை படைத்த நாடு. மக்சிய அழகியல் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டுசென்ற நாடு.
இந்தியாவிற்கு எல்லா வகையிலும் உதவிய நாடு. ரஷ்ய சிறுகதை எழுத்தாளர் செகாவ் தமிழில் புதுமைப்பித்தன் கு.அழகர்சாமி ரஷ்ய எழுத்தாளர்கள் மக்சிம் கார்க்கி, டால்ஸ்டாய் போன்றோரின் படைப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர் குறிப்பிட்ட சொன்ன கதைகளில் புதுமைபித்தனின் சென்னை மாநகரம் குறித்த மகாமாசானம் அழகிரிசாமியின் தெருநாய் செகாவ் எழுதிய பச்சோந்தி டால்ஸ்டாயின் ஆறடிநிலம் போன்ற கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
அதிகார வர்க்கம் எப்படி மாறிமாறி செயல்படும் என்பதை பச்சோந்தியும், அதிக ஆசைகொண்டவனின் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை ஆறடிநிலமும் உணர்த்துவதை எடுத்துக் கூறினார். அதேபோன்று ஒரு மூத்த அதிகாரியை அவமதித்துவிட்டதாக கருதி அவரிடம் மன்னிப்பு கேட்பதற்காக தொடர்ந்து முயற்சிக்கும் ஒரு அலுவலக கடைநிலை ஊழியரின் நிலைக்குறித்து எழுத்தரின் மரணம் என்ற சிறுகதை மூலம்
எடுத்துரைத்தார்.
எழுத்தாளர்களை படைப்பாளிகளை லெனினும் ரஷ்ய சமூகமும் கொண்டாடினர். நாம் வாழும் காலத்தில் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும். சமூக மாற்றத்திற்காக நம் பங்களிப்பை செய்யவேண்டும் நிறைய புத்தகங்களை படியுங்கள் புதிய படைப்புகளை உரு வாக்குங்கள் என்றார். மாநில துணைச் செயலாளர் களப்பிரான் கருத்தரங்கை சுவைப்பட தொகுத்து வழங்கினார். மாவட்டச் செய லாளர் மா.சண்முகம் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.