பு.புளியம்பட்டி, அக்.17-
மனிதர்களை சிந்திக்க தூண்டுவது புத்தகங்களே என்று சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மனுஷி பேசினார். புன்செய் புளியம்பட்டியில் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 6 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புத்தக திருவிழா ஞாயிறன்று நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழாவில் ஆதி காதலின் நினைவு குறிப்புகள் கவிதை தொகுப்புக்காக 2017 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மனுஷி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், நான் அரசு பள்ளியில் படித்த மாணவி. ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து இன்று இந்திய அளவில் சாகித்ய அகாடமி விருது பெருமளவுக்கு உயர காரணம் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே. அதேநேரம், என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது புத்தக வாசிப்பு தான். என்னுடைய சொந்த முயற்சியில் இதுவரை 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எனது வீட்டு நூலகத்தில் வைத்துள்ளேன். இலக்கியம் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகமாக போய்சேர வேண்டும். அன்பை, தன்னம்பிக்கையை கற்றுக் கொடுப்பது புத்தகங்கள். மனிதர்களை சிந்திக்க தூண்டுவது புத்தகங்கள். அதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்புவது படைப்புகள் தான். மரணத்துக்கு பின்பும் நம்மை நிலை நிறுத்துவது கலை இலக்கிய படைப்புக்கள் தான். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்று இல்லாமல் சுயசிந்தனையோடு இந்த சமூகத்துக்கு பயன் தரும் வகையில் நாம் வாழ வேண்டும். தூக்கு மேடைக்கு செல்லும் தருணம் வரை புத்தகங்களை வாசித்தவர் பகத்சிங். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வாங்கித்தர வேண்டும். புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளுக்கு தூண்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி விழுதுகள் பேரவை செயலாளர் கணேசமூர்த்தி, நிர்வாகி தியாகு, தபோவனம் மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் பள்ளி முதல்வர் முத்துக்குமார், விடியல் அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், தலைவர் தருமராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: