திருப்பூர், அக்.17-
ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் திங்களன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தி மற்றும் வர்த்தகம் தான் இந்திய நாட்டின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயமும் ஜவுளி உற்பத்தியும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் ஏற்றுமதி வர்த்தகத்தின் உயிர்நாடியாக திகழ்வது டிராபேக் எனும் ஊக்கத் தொகை தான். இந்த ஊக்கத் தொகை கடந்த 1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 26 சதவீதம் வரை இருந்தது.

இதன காரணமாகவே ஏற்றுமதி வளர்ச்சி பெற்றது. அதற்குப் பிறகு, டூட்டி டிராபேக் படிப்படியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, கடைசியாக 7.5 சதவீதத்தில் இருந்தது. அதை 2.5 சதவீதமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஊக்கத்தொகை மற்றும் வங்கிக் கடன் இரண்டின் மூலம் தான் திருப்பூரில் பெருமளவு நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊக்கத்தொகை குறைப்பால் நிறுவனங்கள் தொழில் செய்ய இயலாது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் இழக்க நேரிடும். கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.

சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஏற்றுமதி தொழிலுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் பல நெருக்கடிக்கு இடையே ஏற்றுமதி தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிராபேக் ஊக்கத்தொகையை குறைக்காமல், அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: