கெய்ரோ;
எகிப்து நாட்டின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய சார்பில் கலந்துகொண்ட சென்னை வீராங்கனை செலினா செல்வகுமார் 3 தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளார்.

17 வயது ஆகும் செலினா செல்வகுமார், இப்போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான எகிப்து நாட்டின் மரியம் அலோட்பையை எதிர்த்து விளையாடினார். இதில் செலினா 11-5, 12-10, 8-11, 6-11, 11-3, 6-11, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

அதேபோல இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நைஜீரியாவின் ஒரிபமைஸூடன் இணை சேர்ந்து செலினா ஆடினார். இந்த இணை 11-8, 12-10, 9-11, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் எகிப்தின் பரிதா பதாவி, கீரிஸ் நாட்டின் மலமாத்தேனியா இணையை வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் செலினா ஏற்கெனவே தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிலும் வென்றதன் மூலம் 3 தங்கப் பதக்கங்களை அள்ளினார்.

Leave A Reply