உடுமலை, அக்.16-
சம்பளம் மற்றும் போனஸ் வழங்காத பஞ்சாலை நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையிலுள்ள சக்தி தொழில் பேட்டை வளாகத்தில் பி.என்.ஆர் என்ற பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று சிப்ட் முறையில் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பஞ்சாலை நிர்வாகம் முறையாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. இச்சூழலில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதால் நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் போனசை உடனடியாக வழங்குமாறு நிர்வாக தரப்பினரிடம் தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.

ஆனால், இதற்கு நிர்வாகத் தரப்பினர் அளித்த பதிலால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, இந்த பஞ்சாலையை நடத்தி வந்த நடராஜ் என்பவர் தொழிலாளர்களின் சம்பள பாக்கியுடன் கார்த்திகேயன் மற்றும் சிவஅருள் என்பவர்களுக்கு பஞ்சாலையை குத்தகைக்கு விட்டுவிட்டார்கள் என்றும், ஆகவே, தொழிலாளர்களுக்கு எவ்வித பாக்கி தொகையும் தர முடியாது என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்களன்று உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, தங்களது நிலுவை சம்பளம் மற்றும் போனசை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: