எம். பால சுப்பிரமணியம்,                                                                                                                    கட்டுரையாளர்: விருதுநகர் மாவட்ட பட்டாசு – தீப்பெட்டி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர்.

ஒரு இணையதள ஆங்கில பத்திரிகையாளருடன் நானும் பட்டாசுத்தொழிலாளர்களை நேரடியாக சந்திக்கச் சென்றோம். தில்லி மற்றும் இதர மாநிலங்களில் தடை செய்யப்படுவதினால் ஏற்படும் பாதிப்புகள் தொழிலையும் தொழிலாளர்களையும் எந்த அளவில் பாதிக்கும் என்பது குறித்து அறிவது என்பது தான் இதன் நோக்கம்.

பல ஆண்டுகாலமாய் சாக்கடை அருகில் மட்டுமே குடியிருந்து பழகிப்போன தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றோம். சில பேர் வேலைக்கு சென்றிருந்தனர். சில இளைஞர்களும் தென்பட்டனர், எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்களா என்று கேட்டதற்கு, ஆமா என்ன விஷயம் என்று ஆர்வமாக கேட்டனர்.

தெருவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி சொன்னது பட்டாசு தொழிலில் 5வருஷமா வேலை செய்றேன். எனது வீட்டுக்கார் அச்சாபீஸில் வேலை செய்கிறார். இத்தொழில் கூலி செய்வதற்கு தக்கதான் என்றாலும் இந்த வருஷம் ஒருவாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் தான் வேலை கொடுத்தாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடிதான் காசுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம்னு சொன்னாங்க இப்ப வரை பொழப்புக்கு வேற வழி இல்லை. இதைவிட்டா வேற ஊரபாத்துதான் போகணும்.

அடுத்ததாக ஒரு இளைஞன், நான் 5வருசமா வேலைக்கு போறேன் இதுக்கு முன்னாடி அச்சாபீஸ்க்கு தான் போனேன். சம்பளம் கட்டுபிடியாகல அங்க வேலைக்கு போனதும் ஒவ்வொரு வேலையா பாத்து தெரிஞ்ச பின்னாடிதான் இப்போ மருந்து சலிக்கும் வேலை பாக்குறேன். மருந்து பெயருல்லாம் தெரியாது. போர்மேனுக்குதான் தெரியும் நாங்க வேலை பார்ப்போம் இதனால் பாதிப்பு ஏதும் இருக்குதா இப்போ பாதிக்காது வயசானகாலத்துல பாதிக்கும் என்றார்.சரி இந்த வேலை இல்லையெனில் என்ன பண்ணுவீங்க? உங்களோட சென்னை அல்லது தில்லிக்கு வந்துரவேண்டியது தான் தில்லி மட்டுமில்ல, வடக்க பட்டாசு வாங்கினாதான் இங்க எங்களுக்கு 3வேளைசாப்பாடு இல்லைனா பட்டினிதான்

சரிவருடம் முழுவதும் வேலை இருக்குமா? இருக்காது தீபாவளி வேலை முடிஞ்சதும் காலண்டர் சீசன் வேலை பார்ப்போம். அப்புறம் கொத்தனார் வேலைக்கு போவோம் தைமாசம் சாமிகும்பிட்டு அதுக்கப்புறம் வேலை ஆரம்பிப்பாங்க சரி இப்போ நிறைய மாநிலங்களில்ல தடைசெய்றாங்க நீங்க என்ன பண்ணுவீங்க? அவ்வளதான் ஊரை காலிபண்ணி போறத தவிர வேற வழியில்லை.

60வயசு முடிஞ்ச ராணி என்ற அம்மாவ பார்த்தோம் இந்த தொழில்ல நான் 30வருஷசமாக பாக்குறேன். அன்னைக்கு 4குரோசுக்கு 5பைசா கொடுத்தாங்க இன்னைக்கு 75பைசா கொடுக்குறாங்க எனது வீட்டுக்காரரும் பட்டாசுல தான் வேலை பாக்குறாரு அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போய்டும் எனக்கு வயிறுவலிக்கும் இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் போய்தான் பாப்போம். வெளியில பாக்குற அளவுக்கு வசதி வாய்ப்பு கிடையாது எல்லா வேலையும் தெரியும்.

எங்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள கட்டிக்கொடுத்துட்டோம். சொந்த வீடு கிடையாது அன்றாடம் வேலை பார்த்து குடும்பம் நடத்துறதே பெரும்பாடு சம்பளமும் கம்மிதான் கூட கேட்டா வேலைக்கு வேண்டாம்னு சொல்றாங்க வேற தொழில் இல்லை. விவசாய வேலை ஒரு காலத்துல செஞ்சோம் இப்ப இல்ல இப்போ வயசாகிடுச்சு நீ வேலைக்கு வேண்டாம்னு சொல்றாங்க வேற வழியில்லாம போய்கிட்டுதான் இருக்கோம். இந்த மோடி அத தாரேன் இதை தாரேன் சொன்னாரு ஒன்னும் செய்யல இங்க அவரு வந்தா அவருகிட்ட நாலு கேள்வின்னாலும் நறுக்குன்னு கேட்பேன்னு சொல்லி முடித்தார்.இதுதான் விருதுநகர் மாவட்டத்தின் நிலைமை. சுற்றுச்சூழல் குறித்ததோ புரிதலோ அல்லது பட்டாசுக்கு எதிராகவோ பேசுவோர் கவனிக்க வேண்டியது. அடுத்ததாக இத்தனை ஆண்டுகளாக ஆளும் ஆண்ட மத்திய, மாநில அரசுகள் என்ன செய்தது? இனிமேல் என்ன செய்யும் செய்துவிட முடியும் என்பதையும் பார்ப்போம்.

நூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க தொழில் என்றால் தென்மாவட்டத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிலே. 5லட்சம் தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இத்தொழில் இங்கு உருவானதற்கு சீதோஷ்ண நிலைமையே காரணம், கந்தக பூமி என்றும் சொல்வார்கள்.

சிவகாசியின் முன்னோர்களால் தொலை நோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்ட இத்தொழில் இன்று 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வயிற்றுப் பசியை தீர்க்கிறது என்று சொன்னால் அளப்பரிய சாதனை தானே இதில் அரசின் பங்கு எத்தகையது என்று கேட்டால் துரும்பு கூட இல்லை. இதற்கு இயந்திரம் தேவையில்லை, மின்சாரம் தேவையில்லை, இன்றும் கையால் செய்யப்படும் தொழில் எது என்று கேட்டால் இந்தியாவில் பட்டாசுத் தொழிலை தவிர ஏதேனும் இல்லை என்றே சொல்லலாம்.

விரட்டப்பட்ட தொழிலாளர்கள்                                                                                                                                             தீப்பெட்டித் தொழில் 1990ஆம் ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையை அளித்தது. அதை நம்பி வயிற்றுப்பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த மக்களின் வயிற்றில் அடித்ததை இம்மாவட்ட மக்கள் மறக்கவில்லை. இத்தொழிலில் இயந்திரத்தை கொண்டு வர அரசு அனுமதித்தது. அதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்.

அழிவை நோக்கி
தற்போது பட்டாசுத் தொழில் அழிவை நோக்கிச் செல்கிறது காரணம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சீன பட்டாசு வரவு அடுத்ததாக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு விதி முறைகள், பணம் மதிப்பிழப்பு, 28சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இத்தனையும் தாங்கிக் கொண்டு இத்தொழில் கம்பீரமாக நிற்கிறது என்று சொன்னால், உற்பத்தியானாளும் அதற்கும் மேலாக பெருமை சேர்க்கிற அற்புதமான தொழிலாளர்களின் உழைப்பாலும் உயர்ப் பலிகளாலும் வேதனைகளாலும் வியர்வையின் மகிமை தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.இந்தியாவின் ஒரு மாவட்டத்தை சார்ந்துள்ள தொழில்தான் என்று அலட்சியம் கொள்ள வேண்டாம் எதிர்கால வாழ்க்கை, கனவு, பொருளாதாரம் என இதனை நம்பி பல தலைமுறைகள் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இதில் மண்ணைப் போடும் விதமாக ஆய்வு என்ற பெயரிலும் சுற்றுச்சூழல் கேடு என்ற பெயரிலும் விஷப்பிரச்சாரம் செய்யப்படுகிறது.

பாதுகாப்பும் விதிமுறைகளும் அவசியம்
மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றமும் பாதுகாப்பு விதிமுறை பிரச்சாரம் செய்திட வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. பாதுகாப்பு அம்சங்கள் விதிமுறைகள் என அனைத்தும் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் இதனை பயன்படுத்தி பட்டாசுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இத்தகைய பிரச்சாரம் செய்வதற்கு முன்பு பரிதாப நிலையில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைய ஆய்வு செய்திட வாருங்கள் அவர்களின் எதிர்காலத்தை, உங்களை போல் ஏசி அறையில் உட்காரும் அளவிற்கு வசதிகளையும் திட்டங்களையும் உருவாக்கிட வேண்டாம். நிம்மதியான வாழ்க்கைக்கான உத்தரவாத்தை ஏற்படுத்திட

உங்களால் உறுதி தரமுடியுமா?
எனவே தற்போது தில்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதித்துள்ளது சரி. காற்று மாசை கட்டுப்படுத்திட வேண்டிய பொறுப்பு உற்பத்தியாளர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேண்டுமானல் ஏற்கலாம். ஆனால் இதனை பயன்படுத்தி மேலும் சில வட மாநிலங்கள் தடை உத்தரவு போடுகின்றன. இதனால் 30சதவீதம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது தொழிலும் தொழிலாளர்களுமே!

பட்டாசு மட்டுமே காரணமா?
இந்தியாவின் ஒட்டு மொத்த சுற்றுச் சூழலும் பட்டாசு வெடிப்பதனால் மட்டுமே பாதிக்கப்படுகிறதா? இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே அதுவும் ஒரு நாள் பயன்படுத்துவதோடு சரி இதர நாட்கள் முழுவதும் இந்திய நாட்டு மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கிறோமா என்ன? சாலைகளில் வாகனங்களின் புகை மூட்டத்தால் சிக்கித் தவிக்காத நாள் ஏதேனும் உண்டா சொல்லுங்கள்? நீங்கள் காரின் கண்ணாடிக்குள் இருந்து கொள்வீர்கள், ஆனால் காரின் புகையை வெளிவிடுவதை பற்றி பேசமாட்டீர்கள். இது எந்த வகையில் நியாயம்? இதில் வெளியாகும் பட்டாசுகளில் உள்ள வேதிப் பொருட்கள் பாதுகாப்பானது அல்ல என்று சொல்லப்படுகிறது. பாதுகாப்பானது இல்லையென்றால் மத்திய அரசுத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளும் அனுமதி கொடுத்து தானே இத்தனை ஆண்டுகள் தொழில் நடைபெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 1.77 கோடி பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் அவை வெளியிடும் புகையின் அளவை கணக்கீடு செய்யுங்கள் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து விதமான கனரக வாகனத்தின் கரும்புகையினால் ஏற்படும் மாசு எவ்வளவு என்று கணக்கிடுங்கள் இதேபோல கார், பஸ், லாரி, ஆட்டோத் தொழிற்சாலைகள் என இன்னும் பல நூற்றுக்கணக்கான தரவுகள் உள்ளன. அதையெல்லாம் விவாதத்திற்குட்படுத்தப்படவில்லை. ஆனால் பட்டாசை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் சூழ்ச்சியை தவிர வேறு ஒன்றும் இல்லை. இத்தடையை தொடர்ந்து நீடித்தாலோ அல்லது இன்ன பிற மாநிலங்களும் இத்தகைய முடிவுக்கு வந்தால் தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்த தேவைக்கான உற்பத்தியை செய்யமுடியாமல் போய்விடும். தொழிலாளர்களின் நிலையை எண்ணிப்பார்த்தால் கொடுமையானதாகவே மாறிவிடும்.

எனவே தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் மத்திய பாஜக அரசும் தமிழக அரசும் இணைந்து இத்தொழிலை பாதுகாத்திடும் வகையில் வாத பிரதி வாதங்களை முன்வைத்திட வேண்டும், இல்லையேல் 5லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். வீதிகளையும் சாலைகளையும் நிரப்பிடும் வகையில் ஒன்றுபட்ட போராட்டத்தை சிஐடியு தலைமையில் வலுவானதாக முன்னெடுப்போம்.

Leave A Reply

%d bloggers like this: