கரூர்,அக்.15-
சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 12 ஆம் தேதியன்று தங்கள் கோரிக்கை களை நிறைவேற்றிட வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்படும் என்று கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு அறிவித்துள்ளது. தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் 4 ஆவது மாநில மாநாடு கரூர் தெரசா கார்னரில் தோழர் ஆர்.முத்துசுந்தரம் அரங்கத்தில் (புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளி) நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.அப்பர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாட்சா, தோழர் ஆர்.முத்துசுந்தரத்தின் உருவப்படத்தை திறந்துவைத்தார்.

வரவேற்புக்குழு தலைவர் மு.மகாவிஷ்ணன் வரவேற்றுப் பேசினார். தலைமைச் செயலக சங்க செயலாளர் கு.வெங்கடேசன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ.சேகர் வேலையறிக்கையையும் மாநிலப் பொருளாளர் நா.வினோத்குமார் வரவு- செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மு.அன்பரசு மாநாட்டை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.  சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்தி வேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் கே.லட்சுமணன் நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்:
மாநாட்டில் புதிய மாநிலத் தலைவராக அ.சேகர், மாநிலப் பொதுச்செயலாளராக பொன்.ஜெயராம், மாநில பொருளாளராக நா.வினோத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 12 ஆம் தேதியன்று பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது, தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையில் 1.1.2016 முதல் 30.9.2017 வரை 21 மாதம் நிலுவை ஊதியம் சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்க வேண்டிய தொகையை வழங்கவில்லை. இவை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. உடனடியாக தமிக அரசு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கல்வித்துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் அனுமதிக்கப்பட்ட 2999 துப்புரவு பணியிடங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யும் போது காலமுறை ஊதியமாற்றம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது அறிவித்துள்ள ஊதிய மாற்றத்தில் அறிவிக்கப்படவில்லை.

இதனால் 3000 துப்புரவு ஊழியர்களது குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. உடனடியாக தமிழக அரசு காலமுறை ஊதியத்தை அறிவிக்க வேண்டும். இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப் பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு பட்டதாரி படிப்பு முடித்தவர்களுக்கு தற்போது தமிழக அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே பட்டம் பெற்ற பட்டதாரி இளநிலை உதவியாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: