சண்டிகார், அக். 15 –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநிலக் குழு அலுவலகத்தை சூறையாடி தலைவர்களை தாக்க பாஜகவினர் முயற்சி செய்துள்ளனர். ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா, சண்டி கார் தலைவர் சஞ்சய் தாண்டன் ஆகியோர் தலைமையில் சண்டிகாரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநிலக்குழு அலுவலகம் முன்பு பாஜகவினர் திரண்டுள்ளனர். அலுவலகத்தை சூறையாட முயற்சித்ததோடு, ஊழியர்களையும் தாக்க முயன்றுள்ளனர். நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜக – ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் நடத்தி வரும் வன்முறைத் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

அக்டோபர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிபிஎம் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் வந்தது. உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் அதிகாலையிலேயே கட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர். தடுப்பு அரண்களைத் தாண்டி பாஜகவினர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்துள்ளனர். கட்சி அலுவலகத்திற்குள் சிபிஎம் ஊழியர்கள் பெருமளவில் இருந்த போதும், பொறுமை காத்துள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் வன்முறையை எதிர்த்தும், அவர்களது சீரழிவு மதவெறி கொள்கைகளையும், கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகளையும் எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருவதால், ஆத்திரமடைந்துள்ளவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அஞ்சாது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: