கல்வி வாய்ப்பு தடுக்கப்பட்டவர்களாக மட்டுமல்லாமல் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே ஒதுக்கப்பட்டவர்கள் தலித் சமூகங்களைச் சேர்ந்த மக்கள். இந்த அநீதிக்கு எதிரான முயற்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. தமிழகத்தில் அயோத்தி தாச பண்டிதர் இதற்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் மேற்கொண்ட முன்முயற்சிகளின் பலனாக, தலித் குழந்தைகளுக்கான தனிப்பள்ளிகள் தொடங்கப்பட்டதன் அடிப்படையில், இன்றைய ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு நூறாண்டுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. மென்மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய இப்பள்ளிகளின் இன்றைய நிலைமை என்ன? இப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித் திருந்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.

ஆதிதிராவிடர் பள்ளிகள் என்று பெயரிருந்தாலும் அனைத்துப் பிரிவு மாணவர்களும் சேர்க்கப்படுகிற இப்பள்ளிகள் சிலவற்றில் ஒரே ஒரு மாணவர்தான் சேர்ந்திருக்கிறாராம்! 2009-10ம் ஆண்டில் இருந்த ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளிகள் 780, மாணவர்கள் 82,441 பேர். நடுநிலைப் பள்ளிகள் 156, மாணவர்கள் 43,606 பேர். உயர்நிலைப் பள்ளிகள் 65, மாணவர்கள் 24,172 பேர். மேல்நிலைப்பள்ளிகள் 72, மாணவர்கள் 60,135 பேர். 2016-17ம் ஆண்டில் இந்த எண்ணிக்கைகள் முறையே 836/39,462; 96/9,941; 117/15,547; 85/41,440 என்று சுருங்கியுள்ளன. ஆங்கில வழி பள்ளிகளை பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்ற காரண ங்கள் கூறப்படுகின்றன. நகரப் பகுதிகளிலோ ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளிட்ட அரசுப் பள்ளிகள், மாணவர் சேர்க்கைக்காகப் போட்டிபோடக்கூடிய அளவுக்கு இருக்கின்றன. கிராமப் பகுதிகளில்தான் இப்பிரச்சனை.

அனைத்துப் பாடங்களுக்குமான போதிய ஆசிரியர்களும் விடுதிக் காப்பாளர்களும் உறுதிப்படுத்தப்படாமை, மாணவர்களுக்கு தனி வாகன வசதியின்மை, தரமான உணவு உள்பட முறையான பராமரிப்பின்மை, நவீன தொழில்நுட்பங்களுடன் உள்கட்டுமானப் போதாமை போன்ற காரணங்கள் புறக்கணிக்க முடியாதவை. தமிழ்வழி பயில்வது பற்றிய விழிப்புணர்வையும் அப்படிப் பயில்வோரின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் ஏற்படுத்தத் தவறியது யார் பொறுப்பு? ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளிகளின் கண்காணிப்புக்குப் போதுமான கல்வி அலுவலர்கள் இல்லாததால் இவற்றைப்பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைத்து விடலாம் என்று கூறுகிறார்கள். ஆனால், தலித் மக்கள் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிற துணைத்திட்ட நிதியை இழக்க வேண்டியதாகிவிடும் என்ற எச்சரிக்கையும் ஒலிக்கிறது. வேறு நோக்கங்களுக்குத் திருப்பப்படுகிற அல்லது பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்படுகிற நிதியை முறையாகச் செலவிட்டாலே போதும், இப்பள்ளிகளின் நிலைமை பலமடங்கு சீரடையும்.

அதைவிட்டு பள்ளிகளை இத்துறையிடமிருந்து மாற்றுவதா? தனியார்மயமாக்குவது தீர்வாகாது. அடிப்படையான பிரச்சனை, பொதுவாகவே அரசுப் பள்ளிகள் மீது அரசுக்கு உள்ள அலட்சியம்தான். தலித் குழந்தைகளுக்காக என்று வருகிறபோது அந்த அலட்சியம் இரட்டிப்பாகிறது. இந்தப் போக்கை அரசு மாற்றிக்கொள்வதும், அப்படி மாற்றுவதற்கான இயக்கங்கள் வலுப்பெறுவதுமே தீர்வு.

Leave A Reply

%d bloggers like this: