காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு சேவை செய்ய தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி, குடந்தை மத்திய கூட்டுறவு வங்கி என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன.குடந்தை மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் தஞ்சாவூரின் ஒரு பகுதி திருவாரூர், நாகை மாவட்டங்களில் 268 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன.
கடந்த 2014- 2015 ஆம் ஆண்டு மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளில் பயிர் இன்சூரன்ஸ் செய்த லட்சக்கணக்கான விவசாயிகளில் சில ஆயிரம் பேர்களுக்கு மட்டும் நிவாரணம் கிடைத்தது.

2016-2017 ஆம் ஆண்டுகளில் மட்டும் குடந்தை மத்திய கூட்டுறவு வங்கியில் 2 லட்சத்து இருபத்தி ஓர் ஆயிரத்து இருநூற்றி எழுபத்தி நான்கு (2,21,274) விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து இருந்தனர். நியூ அஸ்யூரன்ஸ் மூலம் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.375 வீதம் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை பெறப்படுகிறது.

4.12. 2016 ஆம் தேதியில் பயிர் இன்சூரன்ஸ் நிறுத்தப்பட்டது. பின்பு மாவட்ட ஆட்சி தலைவர்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டும் காலக்கெடுவை 5.12.2016 ஆம் தேதி வரை 10 நாட்கள் நீட்டித்து அறிவித்தார். அந்த நீட்டித்த காலத்தில் பல ஆயிரம் விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையைச் செலுத்தினர்.

சம்பந்தமில்லாத சதவீத கணக்கு
2016-2017 ஆம் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், முற்றுகை, சாலை மறியல் என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை கிராம கூட்டுறவு வங்கிகள் மூலமும், விவசாயத் துறையின் மூலமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும் செலுத்தியுள்ளனர்.பயிர் இன்சூரன்ஸ் சம்பந்தமாக ஒரு உதாரணத்திற்கு ஒரு கிராம கூட்டுறவு கடன் சங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். தஞ்சை மாவட்டம் அம்மா பேட்டை ஒன்றியம் பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்த உறுப்பினர்கள் 5,500 பேர் 2016 – 2017 ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றவர்கள் 360 பேர் மட்டுமே. இந்த வங்கியில் ஏக்கருக்கு 375 வீதம் பணம் கட்டி பயிர்க்காப்பீடு செய்தவர்களின் எண்ணிக்கை 416. இதே பகுதியில் விவசாயத்துறை மூலம் பயிர் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டியவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களே.

பூண்டி கிராம கூட்டுறவு வங்கியில் பயிர் இன்சூரன்ஸ் நிவாரணம் கோரி கடந்த 6.9.2017ஆம் தேதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 13 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நாங்கள் பயிர் இன்சூரன்சுக்கான பிரீமியத்தைக் கட்டியுள்ளோம். எங்களுக்கு ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் எத்தனை சதவீதம் நிவாரணம், இன்சூரன்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது என்பதே கோரிக்கை. இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் சதவீதத்தை சொல்ல மறுத்தார்கள். விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்திற்கு பின்பு அதிகாரிகள் கிராம வாரியாக சதவீத கணக்கை சொன்னார்கள். அவர்கள் வழங்கிய நிவாரணத்திற்கும் சம்பந்தமில்லை. விவசாயிகள் ஏமாற்றப்பட்டார்கள்.

பாதிப்பை ஏற்படுத்தும் பாதிப்பு அளவீடு…
அம்மாபேட்டை கிராம கூட்டுறவு வங்கியில் 703 விவசாயிகள் பயிர்க்காப்பீடு பிரீமியம் செலுத்தியுள்ளனர். 283 விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. மெலட்டூர், அன்னப்பன் பேட்டை என எந்த ஒரு கிராம வங்கியிலும் சரிபாதி விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
எண்       கிராமம்                          அறிவித்த சதவீதம்                         கிடைத்த சதவீதம்
1              பூண்டி                                             61%                                                  41%
2              நல்ல வள்ளியன் குடிக்காடு       58.4%
3              ராராமுத்திரக் கோட்டை            65%
4             கத்தரி நத்தம்                                 62.7%
5             ஆலங்குடி                                      61.8%
6             மேலக்களக்குடி                             42.5%
7             புலவர்நத்தம்                                   65.1%
8             நெல்லித்தோப்பு                              62.4%
9             குமிளகுடி                                         61.6%
10           எடவாக்குடி                                      61%
11            ஜெண்பகபுரம்                                -1 62.9%
12           ஜெண்பகம்மாள்புரம்                    -1.2 62%
13            பூண்டி                                              -2%

65 சதவீதம் வரை நிவாரணம் என்று சொன்ன அதிகாரிகள் விவசாயிகளுக்கு கொடுத்தது 40-41 சதவீதம் மட்டுமே. ஏக்கர் ஒன்றுக்கு 100 சதவீதம் என்பது ரூ.25,000 ஆகும். டெல்டாவில் எந்த ஒரு விவசாயிக்கும் 100 சதவீதம் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. கடந்த 6 வருடங்களாக குறுவை சாகுபடி செய்த சம்பா கருகிப்போனது. முழுமையான நிவாரணம் வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் கம்பெனி தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.கடந்த 5.12.2016 முதல் 15.12.2016 வரை பிரீமியம் செலுத்திய விவசாயிகள் ஒருவருக்கு கூட நிவாரணம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 4 விவசாயிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு விவசாயின் நிலத்தில் 10ஓ10 சதுர அடி தேர்வு செய்து, அதில் அறுவடை செய்த நெல்லை எடைபோட்டு வைக்கோல் அளவையும் கணக்கிட்டு செய்கின்றனர். இந்த கணக்கீட்டை விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளும் சேர்ந்தே செய்கின்றனர்.

முதலும் இல்லாமல் கடனும் கிடைக்காமல்
ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை அக்டோபர் 2 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஒரு போக சம்பா சாகுபடி வடகிழக்கு பருவ மழையில் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது தெரியாது. தொடர்ந்து காவிர் டெல்டா விவசாயிகள் முதல் இல்லாமல் கடன் கிடைக்காமல் அல்லல்படும் சூழல் உள்ளது.5.10.2017க்குள் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்றார்கள். 10.10.2017 க்குள்  கிடைத்துவிடும் என்றார்கள். இதுவரை கிடைத்தபாடில்லை. சொன்னது விவசாயத்துறை அமைச்சரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஆவார்.

2016-2017ஆம் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு பயிர் இன்சூரன்ஸ் தொகையை பெற்றுத் தருவார்களா? அல்லது விவசாயிகளை போராட்டக்களத்தில் இறக்கி விடுவார்களா? காலம் தான் பதில் சொல்லும்.
====தஞ்சை கே.பக்கிரிசாமி====

Leave A Reply

%d bloggers like this: