தமிழகத்தின் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் கே.வைத்தியநாதன் 1925ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று திருவாரூரில் பிறந்தார். கிருஷ்ணமூர்த்தி – பரிமளாம்பாள் தம்பதியரின் இரண்டாவது புகதல்வராவார் வைத்தியநாதன். அவரது தந்தையார் கிருஷ்ணமூர்த்தி முதலில் மதுராந்தகம் இந்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியராயிருந்தார். 1929ஆம் ஆண்டிற்குப்பின் சட்டம் பயின்று திருவாரூரில் வழக்கறிஞரானார்.

அவரது சொந்த ஊர் தேரழுந்தூர் அருகில் உள்ள கோமல் கிராமமாகும்.வசதியாக வாழ்ந்துவந்த குடும்பம் 1934ஆம் ஆண்டில் நெருக்கடியைச் சந்தித்தது. அவ்வாண்டில் சொந்த வீடு விற்கப்பட்டது. வாடகை வீட்டில் குடியேறினார்.

வைத்தியநாதன், திருவாரூர் காலக்காரத் தெருவில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மூன்றாவது வகுப்பிலிருந்து ஆங்கிலம் படித்தார். தினமும் மாலையில் தாத்தாவிடம் கிரந்த லிபி கற்றுக் கொண்டார். ஐந்தாவது வகுப்பிலிருந்து திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் அவருடன் ராமசாமி, மாணிக்கம் என்ற இரு தலித் குடும்ப மாணவர்கள் படித்தனர். அவர்களுக்கு திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கலானார். அச்சமயத்தில் அவருடன் ராமசாமி, மாணிக்கம் என்ற இரு தலித் குடும்ப மாணவர்கள் படித்தனர்.

அவர்களுக்கு திருவாரூர் நகர காங்கிரஸ் கமிட்டி உதவித் தொகை கொடுத்து படிக்க வைத்தது. வைத்தியநாதன் தான் படித்ததையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். அந்த இரண்டு மாணவர்களும் வைத்தியநாதன் விட இருமடங்கு வயதானவர்கள்.
வைத்தியநாதனுடன் இப்பள்ளியில் படித்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் வி.தியாகராஸ்ரீன்.

இவர் பின்னாட்களில் தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். ஒரு வகுப்பு முன்பு படித்தவர் வி.சாம்பசிவம். இவர் பின்னாட்களில் நாகை நாடாளுமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். வைத்தியநாதனை விட இரு வகுப்பு பின்பு படித்தவர் திமுக தலைவர் மு.கருணாநிதி.

1938ஆம் ஆண்டில் வைத்தியநாதன் 9ஆவது வகுப்பில் படிக்கும்போது அவரது தந்தையாருக்கு காச நோய் ஏற்பட்டது. தஞ்சை அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏப்ரல் மாதத்தில் இறந்து போனார். குடும்பம் வறுமையால் தத்தளித்தது.

வைத்தியநாதன் படிப்பு நின்று போனது. இரண்டு ஆண்டிற்குப் பின் மீண்டும் தொடர்ந்தார். ஆனால் 19ஆம் ஆண்டில் வைத்தியநாதன் சம்பளம் கட்ட முடியாமல் 10ஆம் வகுப்பை கைவிட்டார். முதலில் தாத்தாவும் பின்னர் தாயாரும் ஒவ்வொருவராக இறந்து போனார்கள்.
உணவுக்கு வழியின்றி தங்க இடமின்றி வைத்தியநாதன் பட்டினியையும், பசியையும் தாங்க வேண்டியிருந்தது. அங்கிருந்த ஒரு கோவில் குருக்களுக்கு உதவியாளரானார்.

பூஜைக்கு சந்தனம் அரைத்துத் தரவேண்டும். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துத் தர வேண்டும். சாமிக்கு படைப்பதற்கு சோறு பொங்கித் தர வேண்டும். பூஜை முடிந்தபின் குருக்கள் தரும் ஒரு கட்டுச் சாதம் அவரது மதிய உணவு. இதர நேரத்தில் குருக்கள் வீட்டு உணவு கிடைக்கும். 1944 ஆம் ஆண்டு வரை இவ்வாறு அவர் வாழ வேண்டியிருந்தது.

அவ்வாண்டில் அவர் புனேயில் இருநது ஒரு ராணுவ அதிகாரி வீட்டில் உதவியாளராகச் சேர்ந்தார். உணவு தயாரிப்பது உள்பட வீட்டு வேலைகளை அவர் செய்ய வேண்டியிருந்தது. 2 ஆண்டு கழித்து வைத்தியநாதன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

அதன்பின் வைத்தியநாதன் திருவாரூரில் ரேசன் கடை ஒன்றில் கணக்கராக சேர்ந்தார். மாதச் சம்பளம் 45 ரூபாய். அச்சமயத்தில் அவர் 4 அனா செலுத்தி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். அவரை உறுப்பினராக்கியவர் திருவாரூர் கே. தங்கராசு. இவர் பின்னாட்களில் திராவிடர் கழகத்தின் பிரபல தலைவராக விளங்கியவர்.

இச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், வைத்தியநாதனுடன் பள்ளியில் படித்தவருமான டாக்டர் தியாகராஜனுடன் அவருக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இது வைத்தியநாதன் படிப்படியாக கம்யூனிஸ்ட்டாக்கியது.

கம்யூனிஸ்ட் கட்சி அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்ததால் “முன்னணி”, “குமாஸ்தர” என்ற பெயர்களில் பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. வைத்தியநாதன் இப்பத்திரிகைகளின் ஏஜெண்டானார். அத்துடன் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தையும் அங்கே பலப்படுததுவதில் முன்னின்றார். 1950ஆம் ஆண்டுவாக்கில் வைத்தியநாதன் திருவாரூரில் இருந்த முடியாத நிலை ஏற்பட்டது. கட்சித் தோழர்கள் மீது கடுமையாக அடக்குமுறை ஏவப்பட்டிருந்தது.

எனவே வைத்தியநாதன் காரைக்குடிக்குச் சென்றார். அங்கேயும் அடக்குமுறை தாண்டவமாடியதும் வைத்தியநாதம். அங்கிருந்து மது விற்பனை இறக்குமதி கடையில் கணக்கராக வேலையில் சேர்ந்தார், அப்பொழுது புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகள் பிரெஞ்சுநாட்டின் காலனியாக இருந்தன. எனவே, அங்கேயும் சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வந்தது. வைத்தியநாதன் அதிலும் பங்கேற்றார். 1951இல் கட்சி குறித்த தடை நீங்கியது.

1952ஆம் ஆண்டில் காரைக்காலில், வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தை அமைக்கும் பணியின் வைத்தியநாதன் ஈடுபட்டார். 1954 ஆம் ஆண்டில் புதுவை கம்யூனிஸ்ட் தலைவர் வி.சுப்பையாவுடனும், வி.பி.சந்தனுடனும் வைத்தியநாதனுக்கு தொடர்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து காரைக்காலில் வைத்தியநாதனுடைய கட்சிப்பணி அதிகரித்தது. கட்சியின் பிரதேசக் குழு உறுப்பினரானார். இதர பல பொறுப்புகளையும் அவர் வகித்தார். 1960ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர் புதுவையில் கட்சியின் முழு நேர ஊழியராக்கப்பட்hர். பாரதி மில்லில் சங்கப்பணிகளுக்கு பொறுப்பாளராக்கப்பட்டார். பின்னர் கட்சியின் புதுவை செயற்குழு உறுப்பினராகவும் வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1966ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரதிமில் போராட்டத்தின்போது வைத்தியநாதன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.1968ஆம் ஆண்டில் வைத்தியநாதன் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் பொறுப்பிலிருந்து விலகி காரைக்காலுக்கு வந்துவிட்டார். 1969ஆம் ஆண்டில் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் காரைக்காலில் மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபட்டார். சுருட்டுத் தொழிலாளிகள் இலக்கத்தை வளர்ப்பதிலும். நெடுங்காடு பஞ்சாலையில் சங்கத்தை உருவாக்குவதிலும் வைத்தியநாதன் ஈடுபட்டார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவுப்படி வைத்தியநாதன் 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுவைக்குத் திருமபி தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பஞ்சாலை சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சமயத்தில் தான் போனஸ் கோரி பஞ்சாலைத் தொழிலாளிகள் மிகப்பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அது வெற்றி பெற்றது.

1972 ஆம் ஆண்டில் வைத்தியநாதன் தஞ்சை மாவட்டத்தில் தொழிற்சங்க இயக்கத்தை வளர்ப்பதற்காக கட்சி அவரை அங்கே அனுப்பியது.தஞ்சையில் அவர் டான்டெக்ஸ் பனியன் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கும். திருப்பூர் பின்னலாடை சங்கத்திற்கு இது முன்னோடியாகவிருந்தது. தஞ்சாவூர் டெக்ஸ்டைல்ஸிலும் வைத்தியநாதன் சங்கத்தை உருவாக்கிடும். கும்பகோணம் கை நெசவுத் தொழிலாளர் ஊதியம் முதலாளி – தொழிலாளி உறவு சம்பந்தமாக நடுவர் மன்ற விசாரணை தஞ்சையிலும், கும்பகோணத்திலும் நடைபெற்றது. சங்கம் சார்பில் வைத்தியநாதன் இதில் வாதிட்டார்.

1973ஆம் ஆண்டில் சிஐடியுவின் தமிழ் மாநில அலுவலகம் மதுரையிலிருந்து செயல்படத் தொடங்கியது. வைத்தியநாதன் அலுவலக செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொண்டே அவர் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை தொழிலாளர் போராட்டம், சங்ககிரி சிமிண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டம் போன்றவற்றிற்கு உதவினார். சிங்கம் புணரி ராயல் என்பீல்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐடிஐ மாணவர்கள் தங்கள் போராட்டத்திற்கு சிஐடியுவிடம் ஆதரவு கேட்டனர்.

வைத்திய நாதன் அருகே சென்று சங்கம் உருவாக்கி போராட்டம் நடத்தினர். முதலில் மாணவர்கள் உண்ணாவிரதம் நடைபெற்றது. பின்னர் ஏஐடியுசி,சிஐடியு, அண்ணாதொழிற்சங்கம் சார்பில் வைத்தியநாதன் உண்ணாவிரதம் ஏற்பாடு செய்தார். சிஐடியு சார்பில் அவரே உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.

மூன்றாவது நாளில் அமைச்சர் மாதவன் தலையிட்டு வாக்குறுதி அளித்ததின் பேரில் உண்ணா விரதம் முடிவுற்றது.சிவகாசியில் ஸ்டாண்டர்ட் லித்தோ அச்சகத்தில் சிஐடியு தலைமையில் போராட்டம் நடந்த போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைவர் பாலசுப்பிரமணியம் கைது. எனவே மதுரையிலிருந்து வைத்தியாநாதனும், சுந்தரராஜனும் அருகே சென்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்தனர்.

1974 ஆம் ஆண்டின் பிரசித்தி பெற்ற ரயில்வே வேலைநிறுத்தத்தின் பொழுது வைத்தியநாதனும், ரயில்வே சங்கத் தலைவர்கள் பலரும் மதுரையில் கைது செய்யப்பட்டு 27 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.1975-76 ஆம் ஆண்டுகளில் சேலம் மேக்னசைட் தொழிலாளர் போராட்டத்தில் வைத்தியநாதன் பெரும் பங்காற்றினார். அதே போன்று குறைந்தபட்ச கூலி போராட்டத்திற்கும் அவர் உதவினார். மேட்டூரில் சிஐடியு சங்கங்கள் வளர்ச்சிக்கும் அவர் உதவினார்.

1976 ஆம் ஆண்டில் பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டுப்போராட்டக்குழுவில் பங்கேற்று பல மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார்.சென்னை பின்னிமில் பிரச்சனையிலும் சிஐடியு சார்பில் அவர் பங்கேற்றார். அரியலூர், தாழையூத்து போன்ற இடங்களில் சிமெண்ட் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியதிலும் வைத்திய நாதனுக்கு பெரும் பங்குண்டு.

1977ஆம் ஆண்டு சிமெண்ட் தொழிலாளர் சம்பள உயர்வுப் பிரச்சனைக்காக உருவாக்கப்பட்ட் நடுவர் குழுவில்( arbitration committee) சிஐடியு சங்கங்கள் சார்பாக வைத்தியநாதன் சாட்சியம் அளித்தார். 1979ஆம் ஆண்டில் தமிழக சிஐடியு சிமெண்ட் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வைத்தியநாதன் அதன் அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழுவில் கே.கருணாகரனுடன் வைத்தியநாதனும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சர்க்கரைத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக, தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் உதவித் தலைவராக, தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக, தமிழ்நாடு கைத்தறித் தொழிலாளர் சம்மேளத்தின் உதவித் தலைவராக அவர் பல ஆண்டுக்காலம் செயல்பட்டார்.1972ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிஐடியுவின் தமிழ் மாநில நிர்வாகிகளுள் ஒருவராக இருந்து வருகிறார். சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழுவிலும், காரியக்குழுவிலும் பல ஆண்டுக்காலம் செயல்பட்டுள்ளார்.

அகில இந்திய பீடித் தொழிலாளர் சர்க்கரைத் தொழிலாளர் சம்மேளனத்தின் உதவித் தலைவராகவும், சர்க்கரைத் தொழிலாளிகளின் தேசீய ஒருங்கிணைப்புக்குழுவிலும் அவர் பல வருட காலம் செயல்பட்டுள்ளார்.மேலும், தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர் சங்கம், குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம், டான்சி தொழிலாளர் சங்கம் போன்றவற்றின் உருவாக்கத்திற்கு வைத்தியநாதன் பெரிதும் உதவியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக 17 ஆண்டுக்காலம் அவர் பணியாற்றினார்.

1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. செப்.9ஆம் தேதியன்று கோவையில் நடைபெறவிருந்த போனஸ் பேச்சுவார்த்தைக்காக 8ஆம் தேதி இரவில் அவர் கோவை புறப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பேருந்தில் சென்ற அவர், அதிலிருந்து இறங்கும் பொழுது இடதுகால் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை குணப்படுத்த சிஐடியு ஏராளமாகச் செலவிட்டது என்றாலும் அவரால் முன்பு போல் நடக்க இயலவில்லை.
எனவே, அலுவலகத்திலேயே தங்கி, சங்கங்களுக்கு வழிகாட்டும் வேலையைச் செய்து வந்தார்.
தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில் சங்கம் வைத்து அந்தத் தொழிலாளிகளோடு நெருக்கமாகப் பழகி தொழிற்சங்க இயக்கத்தை, குறிப்பாக சிஐடியுவை வளர்த்த பெருமை கே.வைத்திய நாதனுக்கு நிச்சயம் உண்டு!

Leave A Reply

%d bloggers like this: