நீலகிரி, ஆக். 13-
நீலகிரியில் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் அரசு தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு இந்தாண்டிற்கான போனஸ் அறிவிக்கப்படாததால் தொழிலாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேவாலா, பந்தலூர், கொளப்பள்ளி, நெல்லியாளம், சேரங்கோடு, நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று பந்தலூர் பஜாரில் ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பி.டபுள்யு.சி தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, சிஐடியு தொழிற்சங்கத்தின் நிர்வாகி ரமேஷ், ஏஐடியுசி பாலகிருஷ்ணன், எல்பிஎப் மாடசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் பங்கேற்றோர் குறைந்தபட்சம் 20 சதவிகித போனஸ் வழங்கக்கோரி முழுங்கங்களை எழுப்பினர்.

இதேபோன்று நடுவட்டத்தில் சின்கோனா அலுவலகம், உக்கர், பற்றிச்சோலை, நடுவட்டம், நடுவட்டம் ஐபி உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply