===க.சுவாமிநாதன்===
சிங்கன்கன்” – இதுதான் புல்லட் ரயிலின் பெயர். சபர்மதியிலிருந்து மும்பை வரை 508 கி.மீ. தூரத்திற்கு போடப்படவுள்ள ரயில்பாதை இந்தியா முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்லைன் (அக்டோபர் 13, 2017) இதழில் வி.ஸ்ரீதர் எழுதியுள்ள கட்டுரை பல கேள்விகளுக்கு விடை தருகிறது.

கேள்வி; புல்லட் ரயில் திட்டமே முழுக்க முழுக்க இலவசம் போன்றது என்று பிரதமர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளாரே?
பதில்;புல்லட் ரயில் பாதையைப் போடுவதற்கு 1 கி.மீ. தூரத்திற்கு ரூ.217 கோடிகள் ஆகுமாம். 508 கி.மீ. போடுவதானால் ரூ.1,10,000 கோடியை மொத்தச் செலவுகள் தொட்டுவிடும். இதற்காக ரூ.88,000 கோடிகளை மிகக் குறைவான வட்டியில் அதாவது ஆண்டிற்கு 0.1 சதவீதம் – ஜப்பான் இண்டர்நேசனல் கோவாப்பரேசன் ஏஜென்சி தரப்போகிறதாம். அதுவும் கடன் தவணைக்காலம் 50 ஆண்டுகளுக்கும் அதிகம். “உலகில் எந்த வங்கியையும் விட ஓர் நல்ல நண்பரை ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயிடம் கண்டேன்” என உணர்ச்சி வசப்பட்டுள்ளார் மோடி.

கேள்வி;பரவாயில்லையே! எப்படி இவ்வளவு தர்ம சிந்தனையோடு ஒரு நிதி நிறுவனம் கடன் தருகிறது?
பதில்;இப்படி ஒரு ‘பிரமையை’ உண்டு பண்ணுவதுதான் நோக்கம்.
ஜப்பான் இண்டர்நேசனல் கோவாப்பரேசன் ஏஜென்சி (ஜிக்கா) சந்தை வேட்டையில் உலகம் முழுவதும் ஈடுபடுகிற நிறுவனம் ஆகும். இரண்டு உலகளாவிய ஆலோசனை நிறுவனங்களில் மூத்த நிர்வாகியாக இருந்த ஒருவரின் கருத்துப்படி, உலக வங்கிக்கு கூட “ஜிக்கா” மீது நல்ல கருத்து இல்லை. தற்போது இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு டெண்டர்களெல்லாம் விடப்படவில்லை. “ஜிக்கா” நிறுவனம் தனித்தெரிவாக ஆர்டரைப் பெற்றுள்ளது. ‘டெண்டர் இல்லாத வழி’ என்றாலே மிக மிக அதிகமான செலவு வைப்பது என்று எல்லோருக்கும் தெரியும்.

கேள்வி; ஆனாலும் 0.1 சதவீத வட்டி என்பது ஆச்சரியமாக இருக்கிறதே!                    பதில்; மேலே குறிப்பிட்ட நிபுணரின் வார்த்தைகளில், “ஜப்பான் நிறுவனங்கள் சம்பந்தப்படுகிற தொழில் ஒப்பந்தங்களுக்கே ‘ஜிக்கா’ கடன் தருகிறது. அந்த ஒப்பந்தங்களில் எல்லாம் திரைமறைவுச் செலவுகள் ஒளிந்திருக்கும்’ என்று ரகசியத்தை உடைக்கிறார். ஒரு கணக்கைப் பாருங்கள்! 2014ல் உலக வங்கியின் சீன அலுவலகம் அதிவேக ரயில் பற்றிய அறிக்கையில் ஒரு கி.மீ. ரயில்பாதைக்கு ரூ.110 கோடியிலிருந்து ரூ.136 கோடி வரை ஆகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனவோடு அப்படியே இந்தியாவை ஒப்பிடக்கூடாது என்றாலும் தற்போது இந்தியாவில் புல்லட் ரயிலுக்கு ஆகிற செலவை நியாயப்படுத்த முடியாது.எப்படிப் பார்த்தாலும் கி.மீ.க்கு 217 கோடிகள் என்பது குறைந்தபட்சம் 59 சதவீதம் அதிகம். அதிகபட்சம் 97 சதவீதம் கூடுதல். மொத்தத்தில் ரூ.41,000 கோடிகளிலிருந்து ரூ.54,340 கோடிகள் வரை கூடுதலாக திட்டச் செலவு ஆகிறது என்பதே கணக்கு.

கேள்வி; சீனாவின் 2014 செலவுக் கணக்கை 2017 திட்டச் செலவோடு ஒப்பிட முடியுமா?       பதில்;மூன்றாண்டுகளுக்கு முந்தையச் செலவுதான் அது. ஆனால் சீனாவில் 14 ஆண்டுகால அனுபவத்தில், அதிவேக ரயில்பாதை விரிவாக்கத்தில் இன்னும் செலவுகள் குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை.

குறைவான வட்டி என்ற மாயைக்குப் பின்னால் அதீதத் திட்டச் செலவினம் என்கிற உண்மை மறைந்திருக்கிறது. ‘ஜிக்காவின்’ ஜிகினா வேலையோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜப்பான் நிறுவனங்கள் பயன் அடைவதால் ‘உள்ளுக்குள் கைமாறுகிற’ உத்திகள் இருக்கிறதோ என்று ஆராய வேண்டியுள்ளது.

கேள்வி; அது சரி! ஆனாலும் வட்டி விகிதம் கால் சதவீதம் கூட இல்லையே!
திட்டச் செலவிலேயே 60 சதவீதம், 90 சதவீதம் என லோடு ஆகிவிட்டால் கடன்வட்டி என்பதெல்லாம் கொசுறுதானே!                                                     பதில்;மேலும் ஜப்பானில் “எதிர்மறை வட்டிவிகிதம்” அமலில் உள்ளது. இதைச் செல்லமாக பிரதமரின் பெயரைச் சேர்த்து “அபினாமிக்ஸ்” என்கிறார்கள். எனவே 0.1சதவீதம் என்பதே ஜப்பான் வங்கிகளுக்கு லாபகரமான பேரம்தான்!

கேள்வி; வட்டி குறைவு… ஆனால் லாபம் உண்டு… என்றால் எப்படிச் சாத்தியம்?

                                                    பதில்;சர்வதேச கடன்களில் வருவாயை வட்டி விகிதங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. இரண்டு நாடுகளின் கரன்சிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை விகிதமே தீர்மானிப்பதாக இருக்கும். உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் கரன்சியான “யென்” மதிப்பு ரூபாய்க்கு எதிராக 60சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தைதான் பரிவர்த்தனை விகிதத்தைத் தீர்மானிக்கிற நிலையில் எதிர்காலத்திலும் “யென்” பிரகாசமாக இருக்குமென்பது மதிப்பீடு… இந்தியப் பணவீக்க நிலைமைகள், ஜப்பானிய பணச்சுருக்க சூழ்நிலையோடு ஒப்பிடப்படும்போது “யென்” மதிப்பு எதிர்காலத்திலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பே உள்ளது. ஆகவே வட்டியைக் காட்டிலும், பரிவர்த்தனை விகிதம் ஜப்பானின் கல்லாவைக் கூடுதலாக நிரப்பிவிடும்.

கேள்வி; “யென்” கரன்சியை பதுக்கிவைத்து இப்பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்கிறார்களே!

JAPAN – MARCH 14: A sign for the Bank of Japan is seen in Tokyo, Japan, Wednesday March 15, 2007. The yen held near a one-week high versus the dollar and advanced against the U.K. pound as investors reduced holdings of higher-yielding assets purchased with money borrowed in Japan. (Photo by Torin Boyd/Bloomberg via Getty Images)

பதில்;இதுவெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அல்ல. சில ஐடி நிறுவனங்கள் இப்படிச் செய்வது வழக்கம். ஆனால் நீண்ட காலத்திற்கு செய்ய முடியாது. இன்னொன்று, யென் மதிப்பு உலக அளவில் அதிக ஊசலாட்டம் கொண்டது ஆகும். அதைப் பதுக்கி வைப்பதற்கான செலவும் அதிகம். அதிகபட்சம் 6 மாதங்கள் வேண்டுமானால் இது மாதிரிச் செய்யலாம். ஆனால் 50 ஆண்டுத் திட்டத்திற்கு இதுவெல்லாம் சாத்தியமா என்று சத்தமாகச் சிரித்தாராம் ஒரு நிதித்துறை நிபுணர்.

“நானும்… அபியும்” என்று மோடியும் – சின்சோ அபேயும் கை குலுக்குவதற்கும், கட்டிப் பிடிப்பதற்கும் பின்னால் இவ்வளவு திரைமறைவு ரகசியங்கள் உள்ளன. வண்டவாளத்தில் ஓடுமா புல்லட் ரயில்?

Leave A Reply