திண்டுக்கல்;
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ளது அணைப்பட்டி. இங்கு பேரணை உள்ளது. இந்த பேரணை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த பகுதி தான் ஆற்றுப்படுகையாக உள்ளது. அகன்ற வைகை நதியில் மணல், கனிமங்கள் உள்ளிட்டவை பல ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, உசிலம்பட்டி, உள்ளிட்ட பல ஊர்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல இங்கே உறை கிணறுகள் உள்ளன. வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் தான் இந்த பேரணைக்கும் தண்ணீர் வரும். இந்த அணையை ஒட்டியும், கரையோரங்களிலும் ஏராளமான விவசாயிகள் நெல், கரும்பு என விவசாயம் செய்து வருகின்றனர். கடுமையான வறட்சி நிலவியதால் இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப் போனது.

அதிகாரிகளே ஊக்குவிக்கும் அவலம்
இந்நிலையில் ஆற்றில் மணல் கொள்ளை மட்டும் தடையின்றி நடைபெற்று வருகிறது. யாரும் மணல் அள்ளவில்லை என்றால் அதிகாரிகளே நேரடியாக சென்று மாமூல் கேட்டு மணல் அள்ளச் சொல்வதும், மணல் அள்ளுபவர்கள் இதை விட்டுச்செல்லலாம் என்றால், வேறுபகுதியில் மணல் அள்ளுபவர்களை இங்கு வந்து அள்ளிக் கொள்ளுங்கள் என்று அனுமதிப்பதும் தொடர் கதையாக உள்ளன. சமீபத்தில் மணல் அள்ளுபவரை அரசு குண்டர் சட்டத்தில் போட்டாலும், மணல் மாஃபியாக்களை அதிகாரிகளே ஊக்குவிக்கிற போக்கு நீடிக்கிறது. இந்தப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள் பெருமுயற்சி செய்தார். அந்த அளவிற்கு இந்தப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. ஆனால் அந்த எழிலைச் சீர்குலைக்கும் விதமாக அதிகாரிகளும், காவல்துறையும், மணல் மாஃபியா கும்பல்களும் இந்த நதியை மரணத்திற்குள்ளாக்கி வருகின்றனர்.

மணல் இருக்கும் வரை தான் கரையோரத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் தேங்கும், விவசாயத்திற்கு பயன்படும் என்ற நிலையில் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் நபர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. இந்த ஆற்றை பல இடங்களில், அதன்போக்கை திசை மாற்றிக் கொண்டு செல்ல முயன்ற காட்சிகளையும் பார்க்க முடிகிறது. ஆற்றில் வெள்ளம் வரும் போது, வெட்டப்பட்ட வாய்க்கால்களால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. அரசு அதிகாரிகளே பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக தடுப்பணையில் பாலம் போல கட்டி உள்ளனர். இதையெல்லாம் பொதுப்பணித்துறை கண்டு கொள்ளவில்லை. எனவே வைகைஆற்றை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வந்துள்ளது.

அடையாளம் இழக்கிறது வைகை
இதுதொடர்பாக சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.காசிமாயன் கூறுகையில், மணல் கொள்ளையர்களால் வைகை ஆறு தன் அடையாளத்தை இழந்து வருகிறது. குல்லிசெட்டிபட்டி முதல் சித்தனை வரை சுமார் 7 கி.மீ தூரத்திற்கு மணல் கொள்ளை நடைபெறுகிறது. இந்த இடைவெளியில் 50க்கும் மேற்பட்ட குடிநீர் உறை கிணறுகள் உள்ளன. மணல் அள்ளுவதால் இந்த கிணறுகள் பயன்பாடற்று போயுள்ளன. பல இடங்களில் 20 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டு உள்ளது. இதனால் பல ஊர்களில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:அரசு இந்த குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்து உள்ளது. அந்த பணம் எல்லாம் வீணாகி வருகிறது. திண்டுக்கல். வத்தலகுண்டு, நிலக்கோட்டை, சின்னாளபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், செல்லம்பட்டி, கருமாத்தூர், விளாம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களுக்கு இந்த ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. மணல் அள்ளுவதால் இந்த உறை கிணறுகள் பல சாய்ந்து உள்ளன. கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் மணல் கொள்ளை பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்.மாவட்ட ஆட்சியரிடமும் மனுக் கொடுத்துள்ளோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மணல் கொள்ளையர்களுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியர் துணையாக உள்ளார். வட்டாட்சியரைக் கண்டித்து சிபிஎம் சார்பாக கடந்த 4.2.2017 அன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. டி.எஸ்.பி. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை. மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக புகார் கொடுத்த என்னை மிரட்ட வீட்டுக்கே மணல் கொள்ளையர்கள் குண்டர் படையை ஏவுகிறார்கள். நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே அரசு அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கிடப்பில் கிடக்கும் 136 மனுக்கள்
தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் அண்ணாதுரை கூறுகையில், வைகை ஆற்றை ஒட்டச் சுரண்டியது தொடர்பாக விசாரணைக் குழு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.வைகை ஆற்றுப்படுகையில் இருந்து குருவித்துறை வரை குடிநீருக்கான 164 உறைக் கேணிகள் உள்ளன. இந்த பகுதியில் 7 மணல் கொள்ளையர்கள் டிப்பர் லாரி மூலமாகவும், ஜேசிபி மூலமாகவும், மணல் கடத்தலை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கும். பொதுப்பணித்துறைக்கும், கனிமவளத்துறைக்கும் என கிட்டத்தட்ட 136 மனுக்கள் கொடுத்துள்ளேன். இந்த மனுக்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றது.

இது குறித்து காவல்துறையிடம் கேட்டால் வருவாய்த்துறை ஒத்துழைப்பு இல்லை என்கிறார்கள். வருவாய்த்துறையிடம் கேட்டால் பொதுப்பணித்துறை ஒத்துழைப்பு இல்லை என்கிறார்கள். கனிமவளத் துறைக்கு புகார் கொடுத்தவுடன் இந்த மணல் மாஃபியாக்களுக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டு விடுகிறது. இந்த செயல்பாட்டால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருடமாக ஒரு துளி தண்ணீர் கூட இல்லாமல் கடும் வறட்சிக்கு ஆளாகி உள்ளனர்.
மல்லியம்பட்டி அருகில் ஒரு ஊருக்கான சுடுகாடு மொத்தமாக மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்டு உள்ளது. மேலும் வைகை ஆற்றின் பாதையையும் திசை திருப்பி உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மணல் மாஃபியாக்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து என்னை மிரட்டுகிற சூழல் தான் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த வைகை ஆற்றில் எடுக்கப்பட்ட மணல் குறித்து ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்கி இந்த 15 ஆண்டுகளில் எந்தெந்த அதிகாரிகள் மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக இருந்தார்களோ அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமுறுகிறார் அண்ணாதுரை.

வேடசந்தூரிலும்…
இதேபோல திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஆர்.கோம்பை தொப்பையசாமி மலைப்பகுதியில் இருந்து வறட்டாறு உற்பத்தியாகி கோவிலூர், ஆர்.புதுக்கோட்டை வழியாக மழை வெள்ளநீர் அழகாபுரி குடகனாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் தற்போது கோவிலூரில் இருந்து ஆர்.புதுக்கோட்டை வரை திருட்டுத்தனமாக ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு மணல் எடுக்கப்பட்டு ஒரு இடத்தில் மொத்தமாக குவிக்கப்படுகின்றன. மேலும் அங்கிருந்து லாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.வறட்டாற்றில் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதால் ஆற்றில் மணலே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைவெள்ளநீர் வரும்போது ஆற்றில் மண்ணின் உள்பகுதியில் தண்ணீர் செல்லாமல் இருப்பதால் நிலத்தடிநீர் மட்டம் முற்றிலும் குறைய வாய்ப்பு உண்டு, எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அனுமதியின்றி மணல் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: