செஞ்சியில் இருளர் இளைஞர்களை தாக்கிய செஞ்சி காவல்துறை உதவி ஆய்வாளர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுப்பற்றிய விவரம் வருமாறு:-

பழங்குடியினர் இருளர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள்  ராஜா, அவரது நண்பர்கள் குமார் (20), நாகராஜ் (19) ஆகிய மூன்று பேரும்   சேத்பட் செல்வதற்காக செஞ்சி பேரூராட்சி பேருந்து நிலையத்தில், ஈஸ்வரி வளையல் கடை அருகில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த செஞ்சி காவல் உதவி ஆய்வாளர்  அசோகன்  “என்னங்கடா இங்கு நிக்குறீங்க” என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜா “சார் நாங்க சேத்பட் போவதற்கு வேலூர் பேருந்துக்காக காத்திருக்கிறோம்” என்று சொல்லியுள்ளார்.

வேலூர் பேருந்து கூட்ரோட்டில் தான் வரும் உள்ளே எங்கடா! வரும் என்று கூறிய உதவி ஆய்வாளர் அசோகன் நாகராஜின் இடது கன்னத்தில் பலமாக அடித்துள்ளார். கூட இருந்த ராஜா “சார் நாங்க என்ன தப்பு பண்ணோம் பஸ்சுக்கு தானே நிற்கிறோம்” என்றும்
எங்க நண்பரின் அண்ண மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.  வைத்தியத்திற்கு கழுதைப்பால் கேட்டார்கள். அதை எடுத்துக்கொண்டு செல்கிறோம் என்று குமார், நாகராஜ் இரண்டு பேரும் கூறியுள்ளார்கள்.

உடனே எஸ்.ஐ. இது என்ன கழுதைப்பாலா? இல்ல கள்ளா? என்று கேட்டுள்ளார். மூவரும் இல்லை சார் இது கழுதைப்பால் தான் என்று சொல்லியுள்ளனர்.
மேலும், “சார் எங்க ஊர் மேளச்சேரி, கூலி வேலை செய்கிறோம். தமிழ்நாடு பழங்குடியினர்கள் மக்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நாங்க எங்கள் சமுதாய மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.  எங்கள எதுக்கு அடிக்கிறீங்க என்று ராஜா கேட்டுள்ளார். உடனே, கோபமடைந்த காவல் உதவி ஆய்வாளர், ஆட்டோவை வரச் சொல்லி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மூவரும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றனர்.

இந்த தகவலை அறிந்த மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் சே. அறிவழகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கலைச்செல்வன், எம்.தமிழரசன் உள்ளிட்டோர்  பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரை சந்தித்தனர். பிறகு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பழங்குடியின இளைஞர்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் அசோகன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: