காங்கிரசை சேர்ந்த வீரபத்திர சிங் முதல்வராக உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் பாஜக-வை சேர்ந்த விஜய் ரூபானி முதல்வராக உள்ள குஜராத் சட்டசபைகளின் ஆயுட்காலம் வரும் ஜனவரி 2018 ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் வியாழனன்று தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி வெளியிட்ட அறிவிப்பில் இமாச்சலப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி சட்டசபைக்கான வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 18 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது  :

குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்காமல் , இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவித்திருப்பது வினோதமாக உள்ளது.

பொதுவாக மாநில சட்டசபை தேர்தல்கள் ஆறு மாத காலத்திற்குள் நடைபெறும் போது, அந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான தேதி ஒன்றாக அறிவிக்கப்படும். இது தான் இதுவரை நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால் தற்போது இந்த நடைமுறை இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டுமே கடைபிடிக்கப்பட்டிருக்கிறதே தவிர குஜராத்திற்கு இல்லை. டிசம்பர் 18 ஆம் தேதி இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன், குஜராத் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது மேலும் வினோதமாக இருக்கிறது. இந்த நடத்தை விதிகள் எல்லாமாநிலங்களுக்கும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: