தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு முன்பதிவு மையங்கள் வெள்ளியன்று (அக். 13) திறக்கப்பட்டன.

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னையிலிருந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வருகிற 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 11 ஆயிரத்து 645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 டிக்கெட் கவுண்டர்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளியன்று (அக். 13) திறந்து வைத்தார். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், தாம்பரம் சானட்டோரியத்தில் 2 முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. டிக்கெட் கவுண்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

பேருந்து புறப்படும் இடங்கள்
வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்பகுதி, பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும் அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும்.

ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டிச் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும்.

பேருந்துகளை நிறுத்தி கட்டுப்படுத்தி, சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜீரோ பாயிண்ட், இரும்புலியூர், மதுரவாயல் டோல் பிளாசா, பி.எச்.ரோடு, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டி, நெற்குன்றம், தூர்சன்ட்பவர் சிஸ்டம். அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகளை கோயம்பேடு மலர் வணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி இடத்திலும், லாரிகள் நிறுத்தும் இடத்திலும், பருப்பு மார்க்கெட்டிலும் நிறுத்தி வைத்து, அங்கிருந்து போக்குவரத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு சந்தை ‘இ’ சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து, ‘பி’ சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply