‘கரிமா அக்ரிடெக்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர், இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பணத்தைப் பறிகொடுத்தவர்களும் ஏஜென்டுகளும் கண்ணீர்க் கடலில் தவிக்கிறார்கள் என்ற அதிர்ச்சி செய்தி வரவே, விசாரணையில் இறங்கினோம்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி லால் குஷ்வாகா என்பவர் இந்தியாவின் பல மாநிலங்களில் நிதி நிறுவனம் மற்றும் பால்பண்ணை சார்ந்த தொழில்களை நடத்திவருகிறார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தோல்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்திருக்கிறார். தமிழகத்தில் ‘கரிமா அக்ரிடெக்’ என்ற பெயரில் 2011-ம் ஆண்டு ஜனவரியில் கும்பகோணம், மதுரை, தேனி, விருதுநகர், மதுரை அருகேயுள்ள கருங்காலகுடி ஆகிய ஐந்து இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் அமைக்கப்பட்டன. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக பன்வாரி லால் குஷ்வாகா, அவர் மனைவி ஷோபா ராணி, சகோதரர் சிவராம் குஷ்வாகா ஆகியோர் இருந்தனர்.

இந்த நிறுவனத்தின் திட்டம் இதுதான்… மாதம் ரூ.100 வீதம் 36 மாதங்களுக்குச் செலுத்தினால், முடிவில் நிறுவனம் ரூ.5 ஆயிரம் தரும். மாதத் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். அதற்கேற்ப பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறியிருந்தார்கள். இதனை நம்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை ஃபீல்டு மேனேஜர், அவருக்குக் கீழ் ஏஜென்டுகள்… என நியமித்து, அவர்கள் வசூலித்துத்தரும் தொகையில் 5 முதல் 20 சதவிகிதம் வரை கமிஷனாகக் கொடுத்திருக்கிறார்கள். 5 ஆண்டுகள் கோடிக்கணக்கில் வசூலித்தவர்கள், ஒருநாள் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு ராஜஸ்தான் சென்று விட்டார்கள். பணம் கட்டியவர்கள் ஏஜென்டுகளிடம் பணத்தைக் கேட்டு நெருக்க, ஏஜென்டுகள் ஃபீல்டு மேனேஜர்களைக் கேட்க, இவர்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள்.

இந்நிறுவனத்தில் ஏஜென்டாக இருந்த திருமருகலைச் சேர்ந்த முத்துலெட்சுமி, ‘‘கௌரவமான குடும்பத்தில் பிறந்த நான், இந்தியாவின் பல மாநிலங்களில் பெருந்தொழில் செய்யும் கோடீஸ்வர நிறுவனம் என்று சொல்லியதை நம்பி ஏஜென்டாக சேர்ந்தேன். கிராமப்புற ஏழைப் பெண்களிடம் பேசி இந்தத் திட்டத்தில் இணைத்தேன். குழந்தைகள் படிப்பு, டிரஸ் போன்றவற்றுக்கு உதவுமே என்று இத்திட்டத்தில் சேர்ந்தார்கள். பெண்களிடம் வசூல் செய்து, நான் கம்பெனியில் பணத்தைக் கட்டி ரசீது வாங்கிக் கொடுப்பேன். ஏழைப் பெண்கள் சேமிப்புக்கு நாமும் ஒரு உதவியாக இருப்போமே என்றுதான் இதனைச் செய்தேன். எனக்குக் கணிசமாக கமிஷன் கிடைக்கும். ஆனால், இப்படி ஒரேயடியாக மண்ணை அள்ளிப்போடுவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற ராஜஸ்தான், மதுரை என நானும் சேர்ந்து அலைகிறேன். விருதுநகரில் வழக்குப் போட்டிருக்கிறோம். வழக்கின் முடிவில் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறோம். ஆனால், எங்களிடம் பணம் கட்டியவர்களில் யாராவது தினம்தினம் வந்து அசிங்கமாகத் திட்டுவதைத் தாங்கமுடியவில்லை. உறவுகளும் ‘உனக்கு இது தேவையா’ என்று பேசுகிறார்கள். யாரோ ஏமாற்றிச் சென்றதற்காக இடையில் நாங்கள் அகப்பட்டுத் தவிக்கிறோம். சிலசமயம், தற்கொலை எண்ணம்கூட வருகிறது. குழந்தைகளுக்காக நடைபிணமாய் வாழ்கிறேன்’’ என்றார் கண்ணீர் மல்க. இவரைப்போலவே மல்லியத்தைச் சேர்ந்த ஏஜென்ட் சம்சாத் பேகம், 60 பேரிடம் ரூ.10 லட்சம் வரை வசூலித்துத் தந்திருக்கிறார். மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏஜென்ட் மாசேது, 100 பேரிடம் ரூ.20 லட்சம் வசூலித்துக் கட்டியிருக்கிறார்.

இந்த ஏஜென்டுகளுக்குத் தலைமையாக இருந்தவர், கும்பகோணம் ராதாகிருஷ்ணன். இவர் நிறுவனத்தின் ஃபீல்டு மேனேஜர் பொறுப்பில் இருந்தார். இவரைச் சந்தித்தோம். ‘‘கும்பகோணம் கிளையில் நான் பணிபுரிந்தேன். மூன்று ஆண்டுகள் வசூல் செய்யும்வரை பிரச்னை இல்லை. திட்டம் முதிர்வுபெற்றவுடன் பணத்தைத் திருப்பித் தர வேண்டுமே! அப்போது கேட்டதற்கு, ‘டெல்லியிலிருந்து பணம் வந்தவுடன் தருகிறேன்’ எனக் காலம் தாழ்த்தினார்கள். 2015-ம் ஆண்டு இறுதியில்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. நான் மட்டுமே ரூ.4 கோடி வசூலித்துச் செலுத்தியிருக்கிறேன். எங்களை நம்பி பணம் கட்டிய ஆயிரக்கணக்கானவர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி தருகிறார்கள்.

நிறுவனத்தில் பணியாற்றிய 15 பேர் டெல்லிக்குச் சென்றபோது, சேர்மன் பன்வாரி லால் குஷ்வாகா கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருப்பது தெரியவந்தது. அவரின் தம்பி சிவராம் குஷ்வாகாவை ராஜஸ்தானின் தோல்பூரில் உள்ள கரிமா மில்க் பாயின்ட்டில் சந்தித்தோம். ‘நிச்சயம் பணம் விரைவில் திரும்பக் கொடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதை நம்பி ஊருக்கு வந்துவிட்டோம். ஆனால், சொன்னபடி பணம் வரவில்லை. போன் செய்தாலும் பதில் சொல்வதில்லை. எனவே, மீண்டும் 2016 ஏப்ரலில் தோல்பூர் கரிமா மில்க் பாயின்ட் சென்றபோது, உள்ளேயே விடவில்லை. தோல்பூர் சிறையில் இருந்த பன்வாரி லாலைச் சந்தித்தோம். இரண்டு மாதங்களில் பணத்தைத் தருவதாக உறுதியளித்தார். அதுவும் நடக்கவில்லை.  மீண்டும் அவரைச் சந்திக்கச் சிறைச்சாலைக்குச் சென்றபோது, பார்க்கவே மறுத்துவிட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தோல்பூர் சிறையிலிருந்து பன்வாரி லால் குஷ்வாகாவைக் கடந்த மார்ச் மாதம் மதுரைக்குக் கூட்டிவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவல் எடுத்து விசாரித்தார்கள். ‘பணத்தைப் பல தொழில்களில் முதலீடு செய்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்குள் அனைத்து முதிர்வுத் தொகையையும் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என ஒப்புதல் அளித்தார். அவர் மனைவி ஷோபா ராணி குஷ்வாகா இப்போது தோல்பூர் தொகுதி பி.ஜே.பி. எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். (ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் சொந்த ஊர் இது!) அவரது அரசியல் பலம், பண பலத்தைக் கொண்டு சில நாள்களிலேயே பன்வாரி லால் குஷ்வாகாவை ஜாமீனில் அழைத்துச் சென்றுவிட்டார். ஆனால், இன்றுவரை பணம் வரவில்லை’’ என்றார் வேதனையோடு. இப்புகார் குறித்து விளக்கம் கேட்க ஷோபா ராணி குஷ்வாகாவின் செல்பேசியில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் என்றே பதில் வந்தது.

வழக்கை விசாரித்துவரும் விருதுநகர் பொருளாதாரக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் பேசினோம். ‘‘ஐந்து இடங்களில் கரிமா அக்ரிடெக் நிறுவனம் பொது மக்களிடமிருந்து வசூலித்த பணம் சுமார் ரூ.30 கோடிக்குமேல் இருக்கலாம். எங்களிடம் ரூ.3 கோடிக்கு மட்டும்தான் புகார்கள் வந்தன. உடனே நடவடிக்கை எடுத்து, தோல்பூர் சிறையிலிருந்து பன்வாரி லால் குஷ்வாகாவைக் கொண்டுவந்து ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து சிறையிலடைத்தோம். அவர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றிருக்கிறார். அவர் மனைவி மீதும் வழக்கு உள்ளது. அவர் இப்போது எம்.எல்.ஏ-வாக இருப்பதால் கைது செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது’’ என்றார்.

எத்தனை மோசடிக்காரர்கள் அம்பலமானாலும், எங்கோ ராஜஸ்தானிலிருந்து வந்த நிறுவனத்தை நம்பியும் பணம் கட்டி ஏமாற இங்கு நூற்றுக்கணக்கானவர்கள் தயாராக இருப்பது வேதனை. தமிழக பி.ஜே.பி தலைவர்கள், பி.ஜே.பி குடும்பத்தாரால் ஏமாந்த ஏழைகளின் பணத்தைப் பெற்றுத்தர முயற்சி எடுக்கலாமே!

– மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்

                                                                     நன்றி விகடன்

Leave A Reply