புதுதில்லி;
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆலோசனை கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.கூட்டம் குறித்து  ஐ.சி.சி. நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐசிசி-யால் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு தொடர்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது, புதிதாக இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளது.இந்த வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடும்படி திட்டமிடப்பட்டுள்ளது.டெஸ்ட் லீக் தொடர் 2019-ம் ஆண்டிலிருந்தும், ஒருநாள் லீக் தொடர் 2020-ம் ஆண்டிலிருந்தும் தொடங்கவுள்ளது.

டெஸ்ட் லீக்கில் ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். குறிப்பாக, சொந்த மண்ணில் 3 தொடர்களும், அந்நிய மண்ணில் 3 தொடர்களிலும் கண்டிப்பாக  விளையாட வேண்டும். டெஸ்ட் லீக்கில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021-ல் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.இதேபோல், ஒருநாள் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 8 தொடர்களில் விளையாட வேண்டும். சொந்த மண்ணில் 4 தொடர்களிலும், அந்நிய மண்ணில் 4 தொடர்களிலும் விளையாட வேண்டும்.

பரீட்சார்த்த முறையில் 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பகல்- இரவு டெஸ்ட் தொடர் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் வளர்ச்சி மேம்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave A Reply