சென்னை;
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியிருக்கிறது என்ற உண்மையையே பத்து மாதங்கள் கழித்து லேசாக ஒப்புக் கொண்ட அதிமுக அரசு, இதுதொடர்பாக ஆய்வு செய்ய தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய அரசின் குழுவிடம், கடந்த பத்து மாதங்களில் டெங்கு காய்ச்சலால் வெறும் 40 பேர் தான் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது.டெங்கு மரணங்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதிலேயே தமிழக அரசு குறியாக இருக்கிறது என்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.துப்புரவுத் தொழிலாளர்களின் சேவையையும் தேவையையும் குறைத்து மதிப்பிட்ட தமிழக அரசின் நீண்டகால அலட்சியம், ஏற்கெனவே டெங்கு பாதிப்பு தீவிரமாக இருந்தநிலையில் மீண்டும் டெங்கு பரவும் என்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காத உச்சக்கட்ட அலட்சியம், அனைத்திற்கும் மேலாக நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மக்கள் பொறுப்பு என அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்தது என்பது உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் டெங்கு கொசுக்களின் இலக்காக மாறியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில் டெங்கு பரவியிருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கவே தமிழக அரசுடன் எதிர்க்கட்சிகளும், மக்களும் போராட வேண்டி இருந்தது. இதற்குப் பிறகுதான் மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கை வசதிகளுடன் கூடிய ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருந்தியல் துறை பேராசிரியர் அசுதோஸ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்தியக்குழுவினர் வியாழனன்று இரவு சென்னை வந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளியன்று ஆய்வு செய்த இக்குழுவினர், டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் அசுதோஸ் பிஸ்வாஸ், 2017 ஜனவரி முதல் இதுவரை டெங்கு பாதிப்பால் தமிழகத்தில் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதனிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுத்துறை செயலாளர்களும் மருத்துவக் கண்காணிப்பு அலுவலர்களும் டெங்கு தடுப்பணை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகரிலும், மதுரையை அடுத்துள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவக் காப்பீடு
இதனிடையே முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு காய்ச்சலையும் சேர்க்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியது, தமிழக அரசை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியது.இந்நிலையில் வெள்ளியன்று தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாலும் காப்பீடு உண்டு என்றும், நோயாளிகளை சேர்க்க இடமில்லாமல் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறுவது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: