டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 28 பேர் வரை பலியாகியுள்ளனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் தவித்துக்கொண்டிருக்கும் போது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் அதிகாரிகள் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் குற்றம் சாட்டினார்.திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 55 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.35 செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களும் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

366 படுக்கைகள் உள்ளன.ஆனால் 800க் கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இதன் மூலம் எளிதாக நோய் தொற்றும் ஆபத்து உள்ளது. திருவள்ளூர், ஊத்துக் கோட்டை, திருத்தணி,பூண்டி திருநின்றவூர் போன்ற பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக் கான மக்கள் இந்த மருத்துவமனையை நம்பியுள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ப ஊழியர்கள் இல்லை.குறைந்த ஆட்களை கொண்டு தான் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1500க்கும் அதிகமான புறநோயாளியாக வந்து செல்கின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல் மாவட்டம் முழுவதும் பரவியுள்ளதால் நோயாளிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சென்னை பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவேண்டும், கூடுதலாக மருத்துவர் களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும், உள்நோயாளிகள் அனைவருக்கும் தனித்தனி படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவதை தடுக்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் உருவாகும் ஏடிஸ் கொசு முட்டைகளில் இருந்து புழுக்கள் வராமல் தடுக்கும் டெமிபாஸ் என்ற மருந்தை உடனடியாக தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்.10 அன்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் டி.பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் இ.மோகனா, வட்டக் குழு உறுப்பினர் எஸ். செந்தில்குமார், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு ஆகியோர் பேசினர்.இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் கலந்து கொண்டு பேசுகையில் மாவட்டத்தில் சுகாதாரத்தை பாதுகாக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் மாவட்டத்தில் இது வரை சுமார் 28 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். நோயை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் பேசுகையில் குழந்தைகள், பெண்கள், முதியோர் ஆகியோருக்கு நோயின் தன்மை தீவிரம் அடைந்து பலி எண்ணிக்கை தினம் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் நகராட்சியிலேயே மூன்று பேர் பலியாகியுள்ளனர். நிர்வாகம் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தடுக்க கிராமங்கள் தோறும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்றார்.கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.பன்னீர்செல்வம் பேசும் போது மாவட் டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் நிலவேம்பு கசாயத்தை கூட அனைவருக்கும் வழங்க முடியவில்லை.மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கூட சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. மாவட்டத்தில் 526 ஊராட்சிகள் உள்ளன.இவற்றில் 117 ஊராட்சியில் ஒரு பைசா கூட நிதி இல்லை.197 ஊராட்சியில் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான நிதி உள்ளது. இப்படி ஊராட்சிகளில் நிதியே இல்லாத போது எப்படி தூய்மை பணியை மேற்கொள்ள முடியும்.ஆட்சியர் உடனடியாக ஊராட்சிகளும் நிதியை ஒதுக்கீடு செய்து டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும்.

குளம், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் மருந்துகளை தெளிக்க வேண்டும் தூய்மை பணிக்கு நூறு நாள் வேலை செய்பவர்களையும் பயன்படுத்தலாம் என்றார்.கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு பேசுகையில், தமிழக அரசு எந்த அசைவுமின்றி உள்ளது. மனித உயிர்கள் பலியாவது குறித்து கவலையில்லாத நிர்வாகமாக இருக்கிறது. தமிழக அமைச்சர்கள் கொள்ளையடித்த சொத்தை பாதுகாக்கவும், பதவிகளை தக்கவைத்துக் கொள்வது எப்படி என்ற கவலை மட்டும் உள்ளது. தரமற்ற மருந்துகளை வாங்கி மக்களை கொல்லும் அரசாக உள்ளது என்றார். முன்னதாக பொதுமக்களுக்கு நலவேம்பு கசாயம் வழங்கினர்.

Leave A Reply