ஜெயலலிதாவின் கைரேகை  தொடர்பான வழக்கில் மருத்துவர் பாலாஜி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில்  தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸை அங்கீகரித்து அவரது வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுசெய்தது தொடர்பான ஆவணங்களுடன் மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிடக்கோரி திமுகவைச் சேர்ந்த சரவணன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அக்.6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு வெள்ளியன்று (அக். 13) நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான  தேர்தல் ஆணையத்தின் முதன்மைச்  செயலாளர் வில்பர்ட், ‘‘அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தின் அடிப்படையில் ஜெயலலிதா கைரேகை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்தக் கடிதத்தில் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை இல்லை’’ என்று சாட்சியம் அளித்தார். அதற்கு நீதிபதி,  மதுசூதனன் கடிதம் அளிக்க கட்சியின் பொதுச் செயலாளர் அதிகாரம் அளித்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக வரும் 27ஆம் தேதி மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave A Reply