ஜானகிபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட சுன்னாம்பு கால்வாய் நம்பிக்கை நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இங்கு 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  குடிமனைப் பட்டா இல்லாமல் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இந்தப்பகுதி ஒரே சர்வே எண்ணில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலமாகும். இந்த சர்வே எண்ணில் உள்ள  பகுதியில் கடந்த காலத்தில் 45 குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நம்பிக்கை நகர் பகுதியல் உள்ள குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டுவரி உள்ளிட்ட பல  ஆவனங்களை அரசு  வழங்கியுள்ள நிலையில் பட்டா வழங்காமல் பல்வேறு காரணங்களை கூறி அலைகழித்து வருகிறது.
இந்நிலையில் சுண்ணாம்பு கால்வாய் பகுதி நம்பிக்கை நகரில் உள்ள குடிமனைப் இல்லாத மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (அக். 2) மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் கிளைத் தலைவர் ஆர்.எல்.குமரேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டத் தலைவர் என்.நாகேஷ், வட்டச் செயலாளர் வி.பொன்னுசாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.மாசிலாமணி, எஸ்.ராஜா,  கிளை செயலாளர் பி.சம்பத், பொருளாளர் மதன்குமார், திமுக கிளை செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மதுராந்தகம் வட்டாட்சியர் கற்பகத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: