கோவை, அக்.13-
சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு குறித்த ஒத்திகை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள், வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டினர். இதில் தீயில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும். நீரில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்க வேண்டும். இடிபாடுகளில் சிக்கயவர்களை மீட்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு மீட்பு பணிகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கூறியதாவது:- ஆண்டுதோறும் அக்டோபர் 13ம் தேதி சர்வதேச பேரிடர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு வீரர்கள் மீட்பு பணிகள் குறித்து நிகழ்த்திக் காட்டிய ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். தீபாவளியன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் பட்டால் தண்ணீரில் கழுவி உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் குமரேசன், அழகர்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply