உச்சநீதிமன்ற உத்தரவின் படி அடிப்படை சம்பளத்தை உயர்த்தக்கோரி போராடிய செவிலியர்கள் மீது எஸ்.ஆர்.எம் மருத்துவமனை நிர்வாகம் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  செயல்பட்டு வருகிறது. இங்கு 1200 படுக்கைகள் உள்ளன. இந்நிலையில்  உச்சநீதிமன்றம் 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில் அடிப்படை சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பணி செய்யும் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். கடந்த நான்கு நாட்களாக உள்ளிருப்பு  போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் வியாழனன்று (அக். 13)  இரவு மருத்துவமனை நிர்வகத்தினர் மருத்துவமனை காவலர்களுடன் செவிலியர்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று, “பணிக்கு திரும்புங்கள் இல்லை என்றால் விடுதியை காலி செய்யுங்கள்’’ என்று மிரட்டியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும் வெள்ளியன்று நிர்வாகத்தின்  அடியாட்கள் தாக்கியதில் சத்யா என்ற செவிலியர் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து செவிலியர் சத்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. தகவல் அறிந்து வந்த செங்கை பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சேஷாத்திரி போராட்டத்திறகு ஆதரவு தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
இந்நிலையில் செவிலியர்களுடன் நிர்வாகம் நடத்திய  பேச்சுவார்த்தையில் இரண்டு நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக கூறியுள்ளது.  இதனால் தற்காலிகமாக போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply