புதுதில்லி,
சபரி மலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. சபரி மலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனுத்தாக்கல் செய்தனர். அதில் ‘சபரி மலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பியதோடு, அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது என்றும், கடவுளுக்கு முன்பு அனைவரும் சமம் என்றும் கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக கேரள அரசும், சபரிமலை ஐய்யப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கேரள அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கோயிலின் ஆச்சாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றும் ஒருவரின் மத நம்பிக்கையில் குறுக்கிடுவது தவறு என்றும் கூறி இருந்தது. தேவசம் போர்டு அளித்த அறிக்கையில், காலம் காலமாக கோவிலில் கடைபிடிக்கப்படும் ஆச்சார விதிகளில் தலையிட முடியாது என்று தெரிவித்தது. இடதுசாரி தலைமையிலான அரசு 2007ம் ஆண்டு பெண்கள் கோவிலுக்கு நுழைய அனுமதிக்கலாம் என தனது பதில் மனுவில் கூறியிருந்தது. ஆனால் அதன் பின்னர் அமைந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு பெண்கள் சபரிமலைக்குள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மீண்டும் இடதுசாரி அரசு அமைந்ததும் 2016ம் ஆண்டு பெண்கள் சபரிமலைக்கு நுழைய மாநில அரசு ஆதரவு தெரிவித்தது. அதே சமயம் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என கடந்த ஆண்டு நவம்பர், 7ஆம் தேதி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் கடந்த பிப்ரவரி மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை மற்றொரு பெரிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து உத்தேசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய கேள்விகளைப் பட்டியலிட்டு அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தர விட்டனர். இவ்வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றுவதா? கூடாதா? என்ற கேள்வி எழுந்திருப்பதால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Leave A Reply