ஈரோடு, அக்.13-
பாக்கி தொகையை வழங்கக்கோரி ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக கொடுக்கப்பட வேண்டிய பாக்கி தொகை ரூ.1,670 கோடி மற்றும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் கொடுக்கப்பட வேண்டிய பாக்கி ரூ.360 கோடி என தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்துள்ளது. இந்த பாக்கி தொகையை தமிழக அரசு பெற்றுத்தர வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நடத்தி வருகிறார்கள்.

இதன்தொடர்ச்சியாக கடந்த ஆக்.11ம் தேதியன்று சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து விவசாயிகளையும், சங்க தலைவர்களையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனை கண்டித்தும், கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை மட்டும் ரூ.106 கோடி பாக்கி வைத்துள்ளது. இந்த பாக்கியை உடனடியாக விவசாயிகளுக்கு தர நடவடிக்கை எடுக்கக்கோரி சக்தி சர்க்கரை ஆலை முன்பு வெள்ளியன்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தலைமையில் கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வி.பி.கார்த்திகேயன் தலைமை வகித்தார், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் கே.இ.விவேகானந்தன், சென்னியப்பன், துளசிமணி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே, இந்த காத்திருக்கும் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இருப்பினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன்பின் விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply