புளியம்பட்டி, அக்.13-
சாதாரண மனிதராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, மகாத்மாவாக மாற்றியது புத்தகங்கள் தான் என திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் தெரிவித்தார். புன்செய் புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 6 ஆம் ஆண்டாக புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. வியாழனன்று மாலை நடைபெற்ற விழாவில் பல்வேறு வகையிலும் சிறந்து விளங்கும் 200 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான கே.பாக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அவர் பேசுகையில், ஒரு சிறிய ஊரில் தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக புத்தக திருவிழா சிறப்பாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏனெனில் இளைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை இத்தகைய புத்தக திருவிழாக்கள் தூண்டும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். புத்தகங்கள் மனிதர்களை பண்படுத்தும். தன்னம்பிக்கையை வளர்க்கும். அறியாமை இருளை அகற்றும். இருந்த இடத்தில் இருந்தே உலகை அறிய புத்தகங்கள் பயன்படும். ஒரே வாழ்க்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகங்கள் தரும். சாதாரண மனிதராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, மகாத்மாவாக மாற்றியது புத்தகங்கள் தான். ஆகவே, ஓவ்வொரு புத்தகமும் ஒரு பொக்கிஷம். நாடுகளையும், கலாச்சாரத்தையும்,  பண்பாட்டையும், அறிவியலையும் கண்டுபிடிப்புகளையும், வரலாற்றையும், தன்னம்பிக்கையையும் கற்றுத் தருவது புத்தகங்கள். எனவே, மாணவ, மாணவியர்கள் பாட புத்தகங்களோடு பிற நல்ல புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். பெற்றோர்ககள் குழந்தைகளை புத்தகம் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும்.

சாதாரண மனிதனை மாமனிதனாக மாற்றுவது புத்தகம். புத்தகத்தை வாசிப்போம், வாழ்க்கையை நேசிப்போம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் ராமசாமி தலைமை தாங்கினார். விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். முன்னாள் நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு, அம்மா மெட்ரிக் பள்ளி செயலாளர் ராணி லக்ஷ்மி அன்பு, வெற்றி நர்சிங் கல்லூரி இயக்குனர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply