கோவை, அக்.13-
தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வதற்காக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் வெள்ளியன்று கூட்டம் அலைமோதியது. ஆனால், சர்வர் பிரச்சனையால் முன்பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, இந்தாண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 430 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதில், சென்னை செல்வதற்கு மட்டும் 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இந்த பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய வெள்ளியன்று ஏராளமான பயணிகள் கோவை காந்திபுரம் அரசு போக்குவரத்து பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால், சர்வர் பிரச்சனையால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒரு பயணியின் டிக்கெட்டை புக் செய்ய 15 முதல் 20 நிமிடங்கள் வரை காலதாமதமானது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினர். சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களிலும் இதே நிலை தான் நீடித்தது. இதனால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக முன்பதிவு மையம் அமைக்கப்பட்டு டிக்கெட் ஆன்லைனில் பதிவு செய்து வருகிறோம். சர்வர் பிரச்சனையால் டிக்கெட் புக் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் அனைவருக்கும் டிக்கெட்கள் முன்பதிவு செய்து தரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Leave A Reply