===மதுக்கூர் இராமலிங்கம்===
ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை தமிழக அரசு விளம்பரங்கள் முழுவதும் பச்சை வண்ணத்தில் ஜொலித்தன. பச்சைதான் அவருக்கு ராசியான நிறம் என்று கூறப்பட்டு, நடந்து வரும் பாதையில்கூட பச்சை வண்ண கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்டன.

அவரும் பெரும்பாலும் பச்சை கலர் சேலையை உடுத்தி வந்தார்.ஆனால், தற்போது, தமிழக அரசு விளம்பரங்கள் காவி வண்ணத்திற்கு மாறி வருகின்றன. அண்மையில், மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்ட டெங்கு விழிப்புணர்வு விளம்பரங்களில் பாஜகவுக்கு பிடித்தமான காவி வண்ணமே காணப்படுகிறது.

பிரதமர் மோடியை தலைநகர் தில்லியில் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்துவிட்டு திரும்பினார். அதிமுகவில் தன்னுடைய அணிக்கு முக்கியத்துவம் இல்லை என்று பிரதமரிடம் புகார் தெரிவிக்கவே அவர் சென்றதாக கூறப்படுகிறது. அவர் தன்னுடன் தமிழக அமைச்சர்களையோ, அரசு அதிகாரிகளையோ அழைத்துச் செல்லவில்லை. மாறாக, நீண்ட காலத்திற்கு முன்பே, அதிமுகவுக்கு பாஜகவால் அனுப்பி வைக்கப்பட்ட ‘ஸ்லீப்பர் செல் மைத்ரேயன்’ மட்டுமே உடனிருந்தார்.

இவர், பாஜகவுக்கு ஐந்தாம்படை வேலை பார்ப்பதை அறிந்து கொண்ட ஜெயலலிதா, அவரை மூலையில் முடக்கி வைத்திருந்தார். அதிமுக சார்பில் மாநிலங்களவையில் பேசக்கூட அவர் அனுமதிக்கப்பட்டதில்லை. அம்மையார் மறைவுக்குப் பிறகு, மைத்ரேயன் ஓபிஎஸ் அணியின் அந்தரங்க ஆலோசகர் ஆகிப்போனார். இரு அணிகள் இணைப்புக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தியுடன் சேர்ந்து இவர்தான், அனைத்து வேலைகளையும் பார்த்தார்.

மோடியை எதற்காக சந்தித்தீர்கள் என்று கேட்டால், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கேட்டேன், டெங்கு காய்ச்சலை ஒழிக்க மருந்து கேட்டேன் என்று கதையடிக்கிறார் ஓபிஎஸ். ஆனால், பங்காளிக் காய்ச்சல் குறித்து முறையிடவே அவர் சென்றதாக தெரிகிறது.
தமிழக அரசின் விளம்பரங்களில் பச்சை வண்ணத்திற்கு பதிலாக காவி வண்ணம் காணப்படுவது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கேள்வி திசைமாறிப் போகிறது என்று கூறிவிட்டு மைக்கை மடக்கிவிட்டு, புறப்பட்டார் ஓபிஎஸ். உண்மையில், திசை மாறுவது கேள்வி அல்ல, அதிமுகதான் என்பது தெளிவு.
வைகை அணையை தெர்மாக்கோல் போட்டு மூட முயன்று நோபல் பரிசுக்கு முயன்று கொண்டிருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ, வீட்டு வாசலில் சாணத்தை தெளித்தால் டெங்கு வராது என்று கூறியுள்ளார். பாஜகவினரின் பசு பக்தியை மெச்சுவதற்காக அவர் இதை கூறியிருக்கலாம்.

பெரும்பாலும் சாணத்தைச் சுற்றித்தான் கொசு சங்கீத கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறது. நல்லவேளை, பாஜகவினரை திருப்திப்படுத்த நிலவேம்பு கசாயத்திற்கு பதிலாக, ஆளுக்கொரு கிளாஸ் சாணியைக் கரைத்து குடியுங்கள் என்று கூறாமல் விட்டுவிட்டார். ஒருவேளை டெங்கு கொசு வாசல் வழியாக வராமல், கொல்லைப்புற வழியாகவோ, ஜன்னல் வழியாகவோ வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ‘தெர்மாக்கோல் ராஜூ’ விளக்கினால் புண்ணியமாய் போகும்.அமைச்சர் அன்பழகன் மாட்டுக் கோமியத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது என்று பாஜகவினரின் பக்தராகவே மாறிவிட்டார். கோமிய மகாத்மியத்தைத்தான் பாஜகவினர் வாய் வலிக்காமல் பேசி வந்தார்கள். இங்கேயும் ஒருவர் கையில் சொம்போடு புறப்பட்டுவிட்டார்.
அம்மாவின் அரசு என்று கூறிக்கொண்டே, ஜெயலலிதா எதிர்த்த அத்தனை சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் தோப்புக்கரணம் போடுகிறது எடப்பாடியார் அரசு. பாஜகவினரின் மனங்களை குளிர வைக்க மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரி புஷ்கர நீராடி, சங்கராச்சாரியாரையும் சேவித்து, திருப்பதி ஏழுமலையானுக்கு கோவிந்தா போட்டு, நல்ல பிள்ளை என பெயரெடுக்க முயல்கிறார் எடப்பாடி.

சென்னை மெரினாவில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காந்தி பிறந்தநாளன்று ஆர்எஸ்எஸ் ஆசாமிகள் தடிக்கம்புகளுடன் பேரணி செல்ல அனுமதிக்கப்படுகிறது. மதுரையில், ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. தன்னை கேட்காமல் பெயரை போட்டு விட்டதாக கூறிய ராஜு, முதலமைச்சர் சொன்னால்தான் கலந்து கொள்வேன் என்றார். நீதிமன்றத் தடையால் அப்போதைக்கு பேரணி நடக்கவில்லை. வேறு இடத்தில் நடத்த நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. அப்போது, பேரணியை துவக்கி வைக்க செல்லூர் செல்வாரா என்று தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக காவி வண்ணம் பூசிக் கொள்கிறது. ஒரு வெள்ளாடு வேலி தாண்டுகிறது. விரைவில் பிரியாணி வாசம் வீசும்..!

Leave A Reply

%d bloggers like this: