பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா ஊழலில் சிக்கியிருக்கிறார். ஜெய்ஷாவின் நிறுவனம் பல முறைகேடுகளை செய்ததாக ரோஹிணி சிங் என்கிற பெண் பத்திரிகையாளர் “தி வயர்” இணையதளத்தில் அக்டோபர் 8 அன்று ஒரு புலனாய்வுக்கட்டுரையில் ஜெய்ஷாவின் நிறுவனம் பல முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இயல்பாக ஆளும் கட்சியின் அகில இந்திய தலைவரின் மகன் பற்றி ஒரு முறைகேடு புகார் வந்தால் பத்திரிகைகளும், இதர ஊடகங்களும் விவாதிப்பார்கள். ஆனால் இதை யார் விவாதித்தாலும் பிஜேபியினர் அந்த விவாதங்களில் பங்கு கொள்ளக்கூடாது என பிஜேபியின் அகில இந்திய தலைமை தடை விதித்திருக்கிறது.

முறைகேடுகள்

ஜெய்ஷா, டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட்டெட் என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டு 6230 ரூபாய் நட்டம். 2014இல் 1724 ரூபாய் நட்டம். 2015இல் 18,728 ரூபாய் லாபம். அதன் விற்றுமுதல் வரவு 50,000 ரூபாய். இந்த நிலையில் 2015-16ஆம் ஆண்டில் அதனுடைய விற்றுமுதல் வரவு திடீரென ரூ.80.5 கோடியாகவும், வெளிநாட்டிலிருந்து வரவு ரூ. 51 கோடியாகவும் மாறுகிறது. ஆனால், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்த கம்பெனியே கலைக்கப்படுகிறது. கம்பெனியின் சொத்து அப்போதைக்கு 2 லட்சம்தான். இதுகுறித்துத் தான் பத்திரிகையாளர் ரோஹிணி சிங் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த விசாரணையில் கீழ்க்கண்ட முறைகேடுகள் தெரியவந்ததாக அவர் முன்வைக்கிறார் :

‘கைமாறு கடன்?’

1. இந்த கம்பெனி கே.ஐ.எப்.எஸ் பைனான்சியல் சர்வீசஸ் என்கிற நிறுவனத்திடம் கடன் வாங்குகிறது. அந்த நிறுவனத்தின் அந்த ஆண்டு வருவாய் ரூ. 7 கோடி மட்டும்தான். ஆனால், ஜெய்ஷா நிறுவனம் வாங்கிய கடன் ரூ.15.78 கோடி. இதுகுறித்து ரோஹிணி சிங் அந்த நிறுவனத்திடம் ஏன் இந்த தொகை கணக்கில் காட்டப்படவில்லை என்று எழுப்பிய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்த கம்பெனியின் உரிமையாளர் ராகேஷ்

‘‘ஜெய்ஷாவின் நிறுவனம் 16 ஆயிரம் மடங்கு லாபமீட்டியதற்கும் முறைகேடான கறுப்புப் பணம் வேறு வகைகளில் ஜெய்ஷா நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்ற கருத்துக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை’’

கந்த்வாலா; இவரது மகனுக்கு பெண் கொடுத்த பரிமள் நத்வாணி என்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குஜராத் பகுதியின்நிர்வாகி. குஜராத்தைச் சேர்ந்த இவர் மாநிலங்களவைக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜார்க்கண்ட்டிலுள்ள பிஜேபிசட்டமன்ற உறுப்பினர்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். கேள்வி என்னவென்றால் பரிமள் நத்வாணி, தான் எம்.பி. ஆனதற்காக தனது சம்பந்தி ராகேஷ் கந்த்வாலா மூலம் 15.78 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறாரா என்பதுதான்.

கூட்டுறவில் வீட்டுயர்வு

2. குஜராத் மாநிலத்திலுள்ள கலுப்பூர் கூட்டுறவு வர்த்தக வங்கியிலிருந்து 25 கோடிரூபாய் கடனை ஜெய் ஷா நிறுவனம் பெறுகிறது. 2 லட்ச ரூபாய் மட்டுமே சொத்துள்ளஒரு நிறுவனத்திற்கு ஒரு கூட்டுறவு வங்கி25 கோடி ரூபாய் கடன் எப்படி கொடுக்கிறது என்கிற கேள்வி இயல்பானது. இரண்டாவதாக, இந்த 25 கோடி ரூபாய்க்கு ஈடாக 2சொத்துக்கள் அடமானமாக காட்டப்பட்டிருக்கிறது. ஒன்று அமித் ஷாவின் சொத்து 5 கோடி ரூபாய்க்கும், இரண்டாவதாக யஷ்பால் சூடசாமா என்பவரின் சொத்து 2 கோடி ரூபாய்க்கும் காட்டப்பட்டிருக்கிறது. 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அடமானமாக வைத்துக் கொண்டு ஒரு கூட்டுறவு வங்கி 25 கோடி ரூபாய் கடன்கொடுக்க முடியுமா? என்பது எழுப்பப்படும் கேள்வி. இதில் இன்னொரு முக்கியமான அம்சம்

K.Kanagaraj

க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இந்த யஷ்பால் சூடசாமா,சொராபுதீன் – கௌசர்பீ போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அமித் ஷாவிற்கு ஆதரவாக சாட்சியமளித்தவர் என்பது.

உன் சொத்து என் சொத்து

3. ஜெய்ஷாவின் நிறுவனம் சோயாபீன்ஸ், எண்ணெய், பயறு வகைகள் ஆகியவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. திடீரென்று இந்திய மரபுசாரா எரிசக்தித்துறையிடம் ஜெய்ஷா நிறுவனம் 10.35 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் பியூஷ் கோயல். 2.1 மெகாவாட் காற்றாலை மின் நிலையம் அமைக்க இந்தகடன் பெறப்பட்டிருக்கிறது. பொதுவாகஒருதுறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கு மத்திய அரசு நிறுவனம் இத்தகைய கடன் கொடுப்பது முறைகேடு இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

‘பேசக்கூடாது’

இந்த விவரங்களையெல்லாம் ரோஹிணி சிங் ஒரு கட்டுரையாக்கி இவை குறித்த கேள்விகளோடு இதுகுறித்தான விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்கள் அனுப்பினால் அதையும் சேர்த்து எட்டாம் தேதியன்று ‘தி வயர்’ இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் கடிதம் எழுதுகிறார். இதற்கு பதிலளித்துள்ள ஜெய் ஷாவின் வழக்கறிஞர் சில விவரங்களை கொடுத்து விட்டு இந்த விவரங்கள் போதுமானவை; எனவே, இந்த கட்டுரையை பிரசுரிக்கக்கூடாது; அப்படி பிரசுரித்தாலோ, அதை வேறு யாரும் பிரசுரித்தாலோ அவர்கள் மீது மானநட்ட வழக்கு தொடரப்படும் என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2011ஆம் ஆண்டு இதே ரோஹிணிசிங் அப்போது எக்னாமிக் டைமஸ் பத்திரிகையில் பணியாற்றி வந்த போது ராபர்ட்வதேரா (பிரியங்காவின் கணவர்) மற்றும்டிஎல்எப் நிறுவனங்கள் செய்த முறைகேடுகள் குறித்து கட்டுரை எழுதினார். அதைதூக்கிக் கொண்டு பிஜேபி ஊர் ஊராக அலைந்தது. ஆனால், இப்போது தனது கட்சித் தலைவரின் மகன் மீதான குற்றச்சாட்டை எங்குமே விவாதிக்கக் கூடாது என்று பிஜேபி விரும்புகிறது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் “அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல, ரோஹிணி சிங் இந்தக் கட்டுரையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியவுடன் இந்தியாவின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக உள்ள துஷார் மேதா, வயர் இணையதளத்திற்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடுத்து ஜெய் ஷாவின்வழக்கறிஞராக வாதாட அனுமதிபெற்று விட்டார். கட்டுரை வெளியானது அக்டோபர் 8ஆம் நாள். அந்தக் கட்டுரை குறித்தானவழக்கில் ஆஜராவதற்காக அனுமதி வழங்கிய நாள் அக்டோபர் 6. ஆனால்அக்டோபர் 11இல் நடந்த முதல் விசாரணைக்கு சொந்த காரணங்களால் வரஇயலவில்லை என்று பின்வாங்கியிருக்கிறார்கள்.

அதுவா இது?

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில்கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக தம்பட்டம்அடித்துக் கொண்டாலும், பாஜகவின் தலைவர்கள் சிலரிடத்தில் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் மேற்கு வங்கம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பிஜேபி பிரமுகர்களிடமிருந்து பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதையும் இந்த அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பழையரூபாய் நோட்டுகள் ஏராளமாக பிஜேபி பிரமுகர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது பற்றியும் அப்போது ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டன. இவையெல்லாம் தனி நபர் ஒருவரின் தவறாகப் பார்க்க வேண்டுமென பாஜக சொல்லித் திரிந்தது.

எனவே, ஜெய்ஷா நிறுவனம் திடீரென16,000 மடங்கு லாபமீட்டியதாக சொல்வதும்,அவ்வளவு லாபமீட்டிய நிறுவனம் லாபம்வந்த 6 மாத காலத்திற்குள் கலைக்கப்பட்டதும், தனியார் நிதி நிறுவனம் கடனாக கொடுத்த பணம் அந்த நிறுவனத்தின் கணக்குகளில் காட்டப்படவில்லை என்பதும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் சம்பந்தி ரிலையன்ஸ் நிறுவனத்தோடு சம்பந்தப்பட்டவர், குஜராத்தை சார்ந்த அவர் சுயேச்சை வேட்பாளராக ஜார்க்கண்ட்டில் உள்ள பிஜேபி எம்எல்ஏக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றார் என்பதும்,7 கோடி ரூபாய் அடமானப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு 15 கோடி ரூபாய்க்குகூட்டுறவு வங்கி ஜெய்ஷாவிற்கு கடன் வழங்கியதும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் அனுபவம் இல்லாத ஒருவருக்கு 10 கோடி ரூபாய் கடன் கொடுத்ததும் என இவையெல்லாவற்றையும் இணைத்துப்பார்க்கிற போது முறைகேடான கறுப்புப்பணம் வேறொரு வகையில் ஜெய் ஷா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற எண்ணமும் ஒருவருக்கு ஏற்படாமல் இருக்க நியாயமில்லை.

ஊர்வாயில் பிளாஸ்திரி

எனவே தான், இது விவாதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஆனால் பிஜேபி இதை ஏற்க மறுக்கிறது. இது மட்டுமன்றி, பொதுவாக பத்திரிகைச் சுதந்திரத்தை அறிவிக்கப்படாத கட்டுப்பாடுகளின் மூலம்தன்னிடம் இருக்கும் அடியாள் பலம், பணபலம், அதிகார பலத்தின் மூலமும்இவற்றையெல்லாம் மறைக்க முயற்சிக்கிறது. பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கிய விவகாரம், அமித் ஷா போலி என்கவுண்ட்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட பிரச்சனை இவற்றையெல்லாம் வெளியிட்ட தெஹல்கா நிறுவனம், அலுவலகத்திலிருந்து துரத்தப்பட்டது. பதான்கோட் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியது பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக என்டிடிவி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், சமூக வலைத்தளத்திலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு அது கைவிடப்பட்டது.

செல்லா நோட்டு பிரச்சனை குறித்து ப.சிதம்பரத்தின் பேட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது. என்டிடிவி ஆங்கில சேனலில் நிதி ரஸ்தான் என்பவர் பாஜகவின் ஊடகத்துறை பொறுப்பாளர் சம்பித் பத்ராவிடம் அவர் விரும்பாத கேள்விகளை கேட்டதற்காக அடுத்த தினமே என்டிடிவி உரிமையாளர்கள் வீட்டில்பலவிதமான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோன்று எக்னாமிக் டைம்ஸ் இந்திய- சீன உறவு குறித்து எழுதிய கட்டுரையை அதன் ஆன்- லைனிலிருந்து எடுக்கஉத்தரவிட்டு, மிகக் கடுமையான எதிர்வினைக்குப் பின்னர் மீண்டும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த நிறுவனம் நடத்திய நிகழ்வுஒன்றுக்கு வருவதாக ஒத்துக் கொண்ட அமித் ஷாவும், மோடியும் திடீரென தங்கள்பங்கேற்பை ரத்து செய்து விட்டார்கள்.

இதேபோன்று ராஜஸ்தானில் பாஜகவின் வசுந்தரா ராஜே அரசாங்கம் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் செய்துள்ள முறைகேடுகள் குறித்தான கட்டுரை அதன் ஆன்- லைன் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர், அவரது “கேட் டிராக்கர்ஸ்” என்கிற பகுதிக்காகவும், மத்திய அரசின் மீதான விமர்சனத்திற்காகவும் அந்த நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியே தற்போது எந்ததொலைக்காட்சியும் ஜெய் ஷாவின் முறைகேடுகள் குறித்து பேச அனுமதிக்கக்கூடாது என அரசு நிறுவனங்களால் நிர்ப்பந்திக்கப்படுகிறது. இது நியாயமற்றதும், உண்மையை மறைப்பதுமான செயலாகும். ரோஹிணி சிங்சொல்வது போல அமித் ஷா வகையறா இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க தடை விதித்து திசை திருப்பலாம். ஆனால் உண்மை வெளிவருவதை தடுத்து விட முடியாது.

Leave A Reply