ஈரோடு, அக்.13-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட் ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறுபன்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

இவ்வமைப்பின் மூலம் உலமாக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உலமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இத்தகைய உறுப்பினர்கள் அடையாள அட்டையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.  இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமணம் உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வவூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர்களில் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும்.

உறுப்பினரின் பதிவை புதுப்பித்தலுக்கு 16.10.2017 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைத்தீர்க்கும் அரங்கில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அச்சமயம் இவ்வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும், சிறுபான்மையினத்தை சேர்ந்த உலமாக்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் எஸ்.பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply