ஈரோடு:
ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், ஈரோடு மாவட்டத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, தற்போது வரை 30க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் அறிகுறிகளுடன் ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை மற்றும் கிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பாக ஆப்பக்கூடம் மற்றும் அத்தாணி பகுதி மக்கள் கூறுகையில், ஆப்பக்கூடல் மற்றும் அத்தாணி ஆரம்ப சுகதார நிலையத்திற்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அதிகளவில் தினமும் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் நிலவேம்பு காசயமும் வழங்கப்பட்டு வருகிறது.அதேநேரம், இங்கு வரும் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தெரிந்தால் பாதிக்கப்பட்டவர்களை பவானி, அந்தியூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் அங்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ஆப்பக்கூடல் மற்றும் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆப்பக்கூடல் பவானி சாலையில் அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டது. அதை உடனடியாக திறந்து அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Leave A Reply