கோவை:
ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் அபராதம் என்கிற பெயரில் என்ஜிபி கல்லூரி நிர்வாகம் கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டி வெள்ளியன்று அக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை களப்பட்டி சாலையில் என்ஜிபி குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரி மாணவர்கள் வெள்ளியன்று காலை திடீரென காளப்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், மாணவர்கள் அதனை ஏற்க மறுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ஒரு நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தாலே நூற்றுக்கணக்கான ரூபாய் அபராதம். ஒரேமாதிரியான உடை உடுத்த வேண்டும் மறுத்தால் அபராதம். பேசினால் அபராதம் என பலவகைகளிலும் பணத்தை பறிக்கிற வேலையில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இன்று சில மாணவர்கள் வெறும் ஒரு நிமிடம் தாமதமாக வந்த நிலையில், அவர்களிடம் அபராதம் கட்ட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மறுத்தால் ஆப்சென்ட் போடப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். இதன்காரணமாகவே பொறுத்தது போதும், இனிபொறுப்பதற்கில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆவேசமாக தெரிவித்தனர். மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து இனி அபராதம் விதிக்க மாட்டோம்என கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் உறுதியளித்தது. இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் காளப்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

Leave A Reply