அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, கன்னிக்கோயில் மேட்டில் இருளர் குடியிருப்பு இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்ட இருளர் மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. மேலும் மாற்று ஏற்பாடுகளுக்கும் உத்தரவாதம் அளிக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் அந்த மக்கள் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கே திரும்பினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் கன்னிகோயில் மேடு பகுதியில்  28 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகள், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால்  தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழையின்போது ஒரு குடியிருப்பு இடிந்து விழுந்ததில் ஐயம்மாள் என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி, பலியானார். இதை தொடர்ந்து மற்ற குடியிருப்புகளில் தங்கியிருந்த இருளர் மக்களை வருவாய்த்துறையினர் அருகில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சமூதாய கூடத்தில் தற்காலிமாக தங்கவைத்தனர்.

இருளர் மக்கள் நிரந்தரமாக தங்குவற்கு  மாற்று இடம் ஒதுக்கித் தருமாறு மதுராந்தகம் வருவாய்த் துறைக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதன்பேரில், வேடந்தாங்கல் மற்றும் பெரும்பேர் கண்டிகை ஆகிய கிராமங்களில் நிலம் தேர்வு செய்யும் பணிகளை, வருவாய்துறையினர் மேற்கொண்டனர். ஆனால், நாட்கள் பல கடந்தும் மாற்று நிலம் தேர்வு செய்வதில் வருவாய்த்துறையினர் அலட்சியமாக நடந்துகொள்வதாக இருளர் மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்..

மேலும், தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட இடத்திலும் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. தண்ணீர் மற்றும் கழிவறை பயன்படுத்த முடியவில்லை. மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதிக்கப்படுவதால், நிகழ்ச்சி முடியும் வரை வெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து, கன்னிக்கோயில் மேடு இருளர் மக்களிடம் கேட்டபோது,   மாற்று இடங்கள் தருவதாக கூறியதாலேயே குடியிருப்புகளை விட்டு வெளியேறினோம். ஆனால் அரசுத் தரப்பில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய இடத்தை தேர்வு செய்யாமல் வேடந்தாங்கல், பெரும்பேர் கண்டிகை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் இடம் தருவதாக தெரிவிக்கின்றனர். பூர்வீகமாக வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு அடியோடு வேறு இடத்திற்கு மாற்ற நினைக்கின்றனர். இதனால் படிக்கும் குழந்தைகளும் பாதிக்கப்டும்.

அரசு நிர்வாகம் தேர்வு செய்துள்ள மாற்று இடத்தில்  நாங்களே குடிசைகள் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். குடிசை அமைத்துக்கொள்ளும் வசதியிருந்தால், நாங்கள் ஏன் சமூதாய நலக்கூடத்தில் தங்கவேண்டும். எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றி அந்த இடத்திலேயே புதிய குடியிருப்புகளை கட்டித்தரவேண்டும் என்றும் அவர் கூறினார்.  இதுகுறித்து, மதுராந்தகம் வட்டாட்சியர் கற்பகம் கூறுகையில், “ கன்னிக்கோயில் மேடு இருளர் மக்களுக்காக பல்வேறு இடங்களில் மாற்று நிலம் தேர்வுசெய்தோம்.

ஆனால்,பேருராடசிக்குட்டபட்ட பகுதியில் இடம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அப்பகுதியில் மாற்று நிலம் இல்லாதபோது அவர்களுக்கு எவ்வாறு வழங்க முடியும். மேலும், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் மிக அருகில் உள்ள உத்தமநல்லூர்  கிராமத்தில் நிலம் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் விருப்பப்பட்டு குடிசைகள் அமைத்தால், பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளை கட்டித்தரத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

Leave A Reply

%d bloggers like this: