கோவை, அக்.12-
மக்களிடம் வரியை பறிக்கும் மாநகராட்சியே, டெங்கு காய்ச்சலால் தொடர் உயிர்பலியாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்திடு எனக்கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்தை அனைத்துக் கட்சியினர் முற்றுகையிட்டு ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர மக்கள் மீது தண்ணீர் வரி, குப்பைக்கு வரி என கோவை மாநகராட்சி கடுமையான வரி விதிப்பை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசி, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி, தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பங்கேற்ற ஐந்தாவது கட்ட முற்றுகை போராட்டம் வியாழனன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகசட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை வகித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி, காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிபிஎம் கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர், வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன், பேரூர் நகரக்குழு செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் என்.வி.தாமோதரன், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், செயற்குழு உறுப்பினர் தங்கவேல், அஸ்ரப்அலி, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சார்ந்த ஏராளமானோர் பங்கேற்று மாநகராட்சியின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்தும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply