நீதிமன்றத்திற்குள் நீதிபதிகளுக்கு இடையே முரண்பாடுகள் வெளிப்படுவதுண்டு. ஆனாலும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அவை தீர்க்கப்படும், தீர்வில்லாமலும் தொடரும். நாட்டின் நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நான்கு நீதிபதிகள், அதுவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதிலேயும் தற்போது பதவியில் உள்ள நீதிபதிகள், தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் குறித்த தங்களின் மனக்குமுறலை வெளியே கொட்டியிருக்கிறார்கள்.

நீதிபதிகள் செலாமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் இன்று (ஜன.12) செய்தியாளர்களைச் சந்தித்து, தலைமை தீபக் மிஸ்ரா அணுகுமுறைகள் நீதிமன்ற அமைப்பையே கேள்விக்கு உட்படுத்தும் வகையில் இருக்கின்றன என்று கூறினார்கள். தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நிலையில் இருப்பவர்கள் இந்த நான்கு பேரும்.

“எதுவும் சரியாக இல்லை என்பதைத் தலைமை நீதிபதியிடம் பல முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். ஆனால் ஒரு பயனும் இல்லை. ஆகவே நாட்டிற்குச் சொல்லிவிடுவது என்று முடிவு செய்தோம். எனவேதான் இந்த அசாதாரணமான முடிவை (செய்தியாளர்களைச் சந்திக்கும் முடிவு) எடுத்தோம். இருபது ஆண்டுகள் கழித்து நாடு எங்களை ஆன்மாவை விற்றுவிட்டவர்கள் என்று சொல்லக்கூடாது,” என்று அவர்கள் கூறினார்கள். இது தொடர்பாகத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

“தலைமை நீதிபதி என்பவர் சம மதிப்புள்ள நீதிபதிகளில் முதன்மையானவர்தான், அதற்குக் கொஞ்சமும் மேலானவர் அல்ல, கீழானவரும் அல்ல என்பது நிலைநாட்டப்பட்டிருக்கிறது,” அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.

முக்கியமான வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் எந்த நீதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும் என்பதைத் தன்னிச்சையாக முடிவு செய்கிறார்; குறிப்பான காரணம் எதுவும் இல்லாமல் அந்த வழக்குகளைத் தேர்ந்தெடுத்த சிலரிடமே விடுகிறார் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். குஜராத்தின் சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.எச். லோயா மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் யார் விசாரிக்க வேண்டும் என்பதைத் தலைமை நீதிபதி முடிவு செய்தது பற்றிச் சொல்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது ஆம் என்று அவர்கள் பதிலளித்துள்ளனர். நீதிபதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பது தொடர்பாகவும் அவர் இவ்வாறு செயல்பட்டதாக நீதிமன்ற வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

தலைமை நீதிபதியாவதற்கு முன்பு, தேசப்பற்றை வளர்க்கத் திரையரங்குகளில் தேசியகீதம் காட்டப்பட வேண்டும், படம் பார்க்க வந்த ரசிகர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று ஆணையிட்டவர் தீபக் மிஸ்ரா. மக்கள் இப்படித் தங்கள் தேசப்பற்றை நெற்றியில் மாட்டிக்கொண்டு வர வேண்டுமா என்று கேட்கிற தேசப்பற்றாளர்களின் குரலை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மற்றொரு மூத்த நீதிபதி சந்திரசூட் கடந்த அக்டோபரில் எதிரொலித்தார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலைச் சந்தித்திருக்கிறார். ஆனால் வேறொரு வழக்கு சம்பந்தமாகவே அந்தச் சந்திப்பு நடந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய சட்ட அமைச்சரும் நீதிபதிகளின் புகார் பற்றிக் ஆலோசித்திருக்கிறார்களாம்.

பிரச்சனைகள் இன்னும் ஆழமாக இருக்கக்கூடும். தொடரும் நாடு தழுவிய விவாதங்களில் அவையெல்லாம் வெளிவரக்கூடும். நீதிபதிகளாய் இருந்துகொண்டு வேறு வழிகளை நாடாமல் அவர்களே இப்படி ஊடகவியலாளர்களிடம் பேசலாமா என்று சிலர் ‘ஒழுக்க நெறி’ பேசக்கூடும்.

சமுதாயத்தில் ஒடுக்கப்படும் குரல்கள் ஒலிப்பதற்கான இடம் நீதிமன்றம். அங்கேயே ஒடுக்கப்படுமானால், அதை மீறிக் குரல்கள் ஒலிப்பதும் அதில் நீதிமன்றத்தின் கனத்த சுவர்களில் விரிசல் விழுவதும் தவிர்க்க முடியாதது. எப்படியோ, ஜனநாயகத்தில் எந்தத்துறையுமே மக்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது – நீதித்துறை உட்பட.

Kumaresan Asak

Leave A Reply

%d bloggers like this: