ஈரோடு, அக்.12-
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகளை வாங்க ஏரளானமான வியாபாரிகள் குவிந்ததால் மாட்டுச்சந்தை மீண்டும் களைகட்ட துவங்கியுள்ளது.

தமிழகத்தில் புகழ்பெற்ற மாட்டுச் சந்தைகளில் ஒன்று ஈரோடு மாவட்டத்தில் வியாழனன்று நடைபெறும் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையாகும். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக, மாடுகளை வளர்க்க போதிய தீவனம் கிடைக்காததால் மாடுகளை விற்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவு முன் வந்தனர். அதேநேரம், அம்மாடுகளை வாங்க போதிய வியாபாரிகள் வருகை தராததால் மாட்டுச் சந்தை களையிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாடுகளுக்கான தீவன தட்டுப்பாட்டு சற்று குறைந்துள்ளது. இதனால் வியாழனன்று கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் மாடுகளை விற்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் வியாழனன்று நடைபெற்ற சந்தைக்கு குறைந்த அளவே மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் 300 பசுமாடுகளும், 250 எருமை மாடுகளும், 150 கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன. எனினும், மாடுகளை வாங்க பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் ஏராளாமானோர் வந்திருந்தனர். குறிப்பாக, கேராளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் பசுமாடுகள் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும் விற்பனையானது.

Leave A Reply

%d bloggers like this: