கோவை, அக்.12-
மத அமைப்பினருடன் அதிகாரிகள் இணைந்து தங்களை மிரட்டுவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கிறிஸ்தவர்கள் முறையிட்டனர். கோவை மாவட்டம் சூலூர், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் செபி பேராயம் சார்பில் நடத்தப்படும் தேவாலயங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சூலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தேவலயங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இல்லை யெனில் சட்டம் ஒழுங்கினை காரணம் காட்டி மூடப்படும் என்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து செபி பேராயம் அமைப்பினை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து முறையிட்டனர். அப்போது தேவாலயங்கள் நடத்த மாவட்டஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இல்லை என்றும், அதிகாரிகளுடன் வரும் மத அமைப்பினர் தங்களை மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். மேலும், தேவாலயங்களில் தொடந்து வழிபாடு நடத்த உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply