எங்களிடமிருந்து நீங்கள்…..
என்ன கற்றுக்கொண்டீர்?
நாலாபுறமும் சுற்றியிருந்து
வீச்சரிவாள்களை வீசியபோதும்
வீரமுடன் போராடி வீழ்ந்த
வில்லாபுரம் வீரத்தாய் லீலாவதியிடம்

ஏகாதிபத்தியக் கழுகுகளும்
உள்ளூர் முதலாளிய வல்லூருகளும்
கழுத்தை சுருக்கிட்டு காவுகேட்டபோதும்
சாதிகளாய் பிறப்பு பிரித்த எம்மை
ஒரே சாவுக் குழியிலிடுங்கள்
தோழர்களை பயிற்றுவித்து
வீரகாவியம் படையுங்களென்ற
சின்னியம்பாளையம் சிங்கங்கள்

வெண்மணித் தீயில் வெந்து மடிந்தோர்
பட்டிவீரன்பட்டி பாண்டி, விருதை சந்த்ரு
கண்டமங்கலம் சுரேஷ், சிங்கை முத்து
கடலூர் குமார், ஆனந்தன், நாவலன்
கணக்கற்ற தியாகிகள் கேட்கிறார்கள்
எங்களிடமிருந்து நீங்கள்…
என்ன தான் கற்றுக்கொண்டீர்?

நீரில் பூத்த நித்தியப் பூக்கள்
வேரில் காய்த்த சத்திய மலர்கள்
நெருப்பு மலர்கள் கருகுதல் கூடுமோ?
வெறுப்பு கங்குகளைத் தின்று
நெருப்புக் கோழியென்றே
நிமிர்ந்து நிற்பீர் தோழர்காள்!

– சூர்யா, கோவை.

Leave A Reply