மூணாறு;                                                                                                                                                                                 இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு நகரம் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறு என வந்ததாக  பெயர்காரணம் உள்ளதாக வரலாறு உள்ளது.  இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி பகுதியில்  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பூத்துக்குலுங்கும்.

நீலக்குறிஞ்சி பூக்கும் சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் இருக்கும். எனவே நீலக்குறிஞ்சி விருந்தளிக்கும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாதங்களுக்கு மூணாறுக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளின் அதிக அளவிலான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்வது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.

நீலக்குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அடுத்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை நீலக்குறிஞ்சி பூத்துக்குலுங்கும் காலமாகும். இந்த சீசனில் ஏறக்குறைய 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மூணாறின் பல்வேறு இடங்களில் நீலக்குறிஞ்சி பூக்கும் என்றபோதிலும் மூணாறு நகரிலிருந்து 8 கிலோ மீட்டர் தெலைவில் அமைந்துள்ள இரவிக்குளம் தேசிய பூங்கா சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் மிக முக்கியமான இடமாகும். பயணிகளின் எப்போதும் இல்லாத அளவிலான வருகையைக் கணக்கில் கொண்டு அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்வது என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நீலக்குறிஞ்சியைக் கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த முறையில் வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் அத்துடன் தேசிய பூங்காவைப் பாதுகாப்பதற்குமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென கூட்டம் முடிவு செய்தது.
மூணாறில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வந்து செல்ல இயலும் என்பதைக் குறித்து ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதித்திட வேண்டுமென முதல்வர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து முன்னதாகவே விளம்பரப்படுத்திட வேண்டும்.வாகனங்களைக் கட்டுப்படுத்துவதுடன் தேவையான வாகன நிறுத்துமிட வசதிகளைச் செய்து கொடுத்திட வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும். குப்பைகளை அழித்தொழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யாத ரிசார்ட்டுகள் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சி பூத்துக்குலுங்கும் காலத்தில் மூணாறு பிரதேசம் முழுவதையும் மிகச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். தேவையான துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.

தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் செய்துதர வேண்டும். மூணாறில் அனைத்துச் சாலைகளையும் பொதுப்பணித்துறை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும். முதலுதவிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். விபத்துக்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருத்தல் அவசியம்.

இந்த சீசனில் எந்த அளவிற்கு வாகனங்கள் வரும் என்பதைக் குறித்து ஆய்வு நடத்திட’நாட்பாக்’கிடம் பொறுப்பை ஒப்படைப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சாலையோர வியாபாரம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு. எனவே அதற்கும் கட்டுப்பாடுகள் தேவையா என்பதைக் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும். வாகனங்களைச் சோதனையிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாகனங்களில் மது பாட்டில்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது.இரவிக்குளம் தேசிய பூங்காவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல அதிக அளவில் பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. 50 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். பூங்காவிற்குள் நுழைவதற்கான நேரம் அதிகரிக்கப்படும். ஆனால் ஒரு நபர் எவ்வளவு நேரம் பூங்காவிற்குள் இருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு இருக்கும்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.

நீலக்குறிஞ்சி பூக்கும் சீசனை கேரள சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு பயன்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார் .
ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் வழக்கறிஞர் கே.ராஜூ, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல், சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், வன-வன உயிரினங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஜேம்ஸ் வர்கீஸ், பொதுப்பணித்துறை செயலாளர் கமலவர்த்தன ராவ், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் வி.எஸ்.செந்தில் முதலானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: