திருப்பூர், அக்.12 –
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதித் தொழிலில் இழப்பு ஏற்பட்டு பெரும் கடன் வலையில் சிக்கிய பிரபல தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி விரிவு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்கிற சீனிவாசன் (51). இவருக்கு மோகனஸ்ரீ என்ற மனைவியும், பூஜா என்ற மகளும், ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளனர். ஃபேர் அன்ட் ஃபிளேர் என்ற பெயரில் சீனிவாசன் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். திருப்பூர் அண்ணாநகரில் அவரது பனியன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. அத்துடன் பெருமாநல்லூர் அருகே அய்யம்பாளையம், போயம்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆறு தொழிற்சாலைகள் உள்ளன.

மொத்தம் 1500 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவருக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, சுமார் ரூ.40 கோடி கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கடன் தொந்தரவு அதிகமாகி மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்நிலையில் செவ்வாயன்று இரவு தனது அறைக்குத் தூங்கச்சென்றவர், காலையில் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரது அறைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அங்கு சீனிவாசன் எவ்வித அசைவும் இல்லாமல் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். அவர் படுக்கைக்கு அருகில் 2 ஊசிகள்கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகனஸ்ரீ, அக்கம் பக்கத்தினர்
உதவியுடன் சீனிவாசனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே சீனிவாசன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் கடன் தொல்லை காரணமாக ஊசி மூலமாக அதிக மருந்து ஏற்றி தற்கொலை செய்து கொண்டது பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான எஃப் எஃப் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொழில் துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சூழ்ந்து வந்த நெருக்கடிக்கு இரையானார்..

வெளிநாட்டுக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள சரக்குகளை விமானம் மூலம் அனுப்பியதை வெளிநாட்டு வர்த்தகர் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டது சீனிவாசனுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடி அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. தொழில் நஷ்டம், கடன் அதிகரித்த நிலையில் ஏற்றுமதிக்கு வழங்கும் ஊக்கத் தொகை (டிராபேக்) 7.5 சதவிகிதத்தில் இருந்துவெறும் 2 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்து விட்டது. இது திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிராபேக் குறைப்பு திருப்பூருக்கு மரண ஓலம் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அறிக்கை வெளிவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

அத்துடன் குறைக்கப்பட்ட டிராபேக் விகிதத்தை மாற்றுவது பற்றி மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதாகக் கூறப்பட்டது. ஆனால் ஓரிரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய அரசின் பொருளாதார ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. டிராபேக் குறைப்பு முடிவில் மத்திய அரசு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கையை கைகழுவி விட்டது. பொதுவாக கடும் போட்டி நிலவும் உலக பின்னலாடை சந்தையில், டிராபேக் தொகை கிடைத்தாலே போதும் என்று இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் ஏறக்குறைய 40 சதவிகிதம் பேர் தொழில் நடத்தி வருவதாகவும், எனவே டிராபேக் குறைப்பு என்பது கணிசமான உற்பத்தியாளர்களுக்கு மரண அடியாகும் என்று தொழில் துறையினர் கூறுகின்றனர். எனவே மத்திய அரசு டிராபேக்கை குறைத்தது கடும்நெருக்கடிக்கு இடையே ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள சீனிவாசன் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

கடும் நெருக்கடியில் இருந்த சீனிவாசன் அந்த நெருக்கடியைக் குறைக்கவும், உடனடிப் பணத் தேவையை சமாளிக்கவும் மைசூரில் இருக்கும் அவரது சாயஆலை நிறுவனத்தைவிற்கும் முடிவை மேற்கொண்டதாகவும், கடைசி நேரத்தில் அதுவும் கைகூடி வராததால் விரக்தியின் உச்சத்திற்குப் போனதாகவும் அவரது நண்பர்கள் வட்டாரத்தினர் கூறினர். இதற்கிடையே கடன்காரர்கள் நேரடியாக மைசூருக்கே சென்று அங்கு சீனிவாசனை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை நேரத்தில் இவ்வாறு சூழ்ந்து வந்த நெருக்கடி நிலையில் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.அதேசமயம் திருப்பூரில் தற்போது ஏற்பட்டிருக்கும் தொழில் நெருக்கடி மிக ஆழமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வது சவாலானதாகும். சீனிவாசன் தற்கொலை சம்பவம், “கடலில் மூழ்கி இருக்கும் பனிப்பாறையின் நுனியை மட்டுமே வெளிப்படுத்துகிறது!” என்கின்றனர் ஏற்றுமதி தொழில் துறையினர்.

Leave A Reply