சேலம், அக்.12-
சேலம் மாவட்டத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்திடவும், ஆலோசனைகள் பெறவும் இலவச அழைப்பு எண்ணை சேலம் மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தி வைத்தார். சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனை வழங்கவும், காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும் சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மைய வளாகத்தில் இலவசசேவை எண்ணுக்கான மையம் (18004252424) தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ரோகிணி இந்த மையத்தை திறந்து வைத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு டோல் ப்ரீ எண் குறித்து விளக்கமளித்தார். இதன்பின் மாவட்ட ஆட்சியர் ரோகிணி செய்தியாளர்களிடம் பேசுகையில், காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவர்களிடம் சென்றும், போலி மருத்துவர்களிடம் சென்றும் ஆபத்தான நிலையில் இறுதி கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால், காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படவும், காய்ச்சல் குறித்து தங்களது சந்கேகங்களை 18004252424 என்ற இலவச சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த சேவையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன் மாவட்டம் முழுவதும் மஸ்தூர் பணியாளர்கள், 100 வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், சுய உதவிகுழுக்கள், கூட்டுறவு, வருவாய் துறைகளை சேர்ந்த மொத்தம் 20 ஆயிரம் பேரை பயன்படுத்தி டெங்கு ஒழிப்பு பணியை மட்டும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: